காரைக்குடியில், பாஜக ஒன்றிய துணைத் தலைவர் பழனியப்பன் 6 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கடை வாடகை தொடர்பான முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பொன்நகர் அல்லி அர்ஜுனா நகரை சேர்ந்த பழனியப்பன் (34). வணிக வளாகத்தின் உரிமையாளரான இவர் சாக்கோட்டை பாஜக ஒன்றிய துணை தலைவராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் பழனியப்பன் பொன்நகர் பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமான பணிகளை பார்வையிடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது 6 பேர் கொண்ட திடீரென பழனியப்பனை வழிமறித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்களிடம் தப்பிக்க முயற்சித்த போது அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டியது. அலறிய படி பழனியப்பன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பியது.

உடனே அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய பழனியப்பனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்தை அடுத்து அழகப்பாபுரம் போலீசார் அவரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் கடையை வாடகைக்கு எடுத்து பைனான்ஸ் தொழில் செய்து வந்த சாந்தகுமாரிடம் கடையை காலி செய்யுமாறு பழனியப்பன் கூறியதால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமான இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தலைமறைவாக உள்ள பைனான்சியர் சாந்தகுமாரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.