அடுத்த 3 மணி நேரம்! சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு டேஞ்சர் அலர்ட்!
Tamilnadu Weather Update: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான மோந்தா புயல் ஆந்திராவை நோக்கி நகர்வதால், தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மோந்தா புயல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26ம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மோந்தா புயலாக உருவாகியுள்ளது.
இன்று கரையை கடக்கிறது
முதலில் இந்த புயல் சென்னையை நோக்கி வருவதாக கணிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆந்திரா மாநிலம் காக்கிநாடா நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது மசூலிபட்டினத்தில் இருந்து 230 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து 310 கி.மீ தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது. இது மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் இன்று மாலை அல்லது இரவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை
இந்நிலையில் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் கனமழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், குமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.