கோவையில் சட்டவிரோதமாக வங்கதேச இளம் பெண்ணை அழைத்து வந்து வீட்டு வேலை செய்ய வைத்து கொடுமைப்படுத்திய பீகாரைச் சேர்ந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பீகாரைச் சேர்ந்தவர் சம்சுதீன். இவர் கோவை செல்வபுரத்தில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இவர் வங்காள தேசத்தைச் சேர்ந்த 18 வயது இளம் பெண்ணை சட்டவிரோதமாக கோவைக்கு அழைத்து வந்து தனது வீட்டில் தங்க வைத்து வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். அத்துடன் அவர் அந்த இளம் பெண்ணை கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் வேறு வழியில்லாமல் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் அந்த இரண்டு பேரையும் அழைத்து விசாரணை நடத்தினர். அதில் அந்த சம்சுதீன் வங்காளதேசத்தை சேர்ந்த அந்த இளம் பெண்ணை சட்டவிரோதமாக கோவைக்கு அழைத்து வந்து தனது வீட்டில் கடந்த ஆறு மாதமாக வைத்து வேலை வாங்கியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சட்ட விரோதமாக அந்த இளம் பெண்ணை அழைத்து வந்ததற்காகவும், அவரை கொடுமைப்படுத்தியதற்காகவும் அவர் மீது செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடமாநில தொழிலாளியான சம்சுதீனை கைது செய்தனர். மேலும் அந்த இளம் பெண்ணை போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது போன்ற வங்காளதேசத்தைச் சேர்ந்த நபர்கள் சட்டவிரோதமாக கோவையில் தங்கி இருக்கிறார்களா ? என்பது குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
