செயங்கொண்டம்

அரியலூரில் பீட்டாவை தடை செய்யக் கோரியும், சல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும் காளைகளுடன் இளைஞர்கள் போராட்டமும், ஊர்வலமும் நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் செயங்கொண்டத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் செயங்கொண்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், சல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரியும், பீட்டா அமைப்பை தடைசெய்ய கோரியும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காந்திபூங்கா எதிரில் இருந்து ஊர்வலம் மேற்கொண்டனர். இந்த ஊர்வலம் நான்கு சாலை, திருச்சி சாலை வழியாகச் சென்று அண்ணாசிலையில் முடிவடைந்தது.

போராட்டம் மற்றும் ஊர்வலத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் காளை வளர்ப்போர், மாடுபிடிக்கும் வீரர்கள், சல்லிக்கட்டு விழா நடத்துவோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு “பீட்டாவை தடைசெய்; சல்லிக்கட்டு நடத்த வழிவிடு” என்று முழக்கமிட்டனர்.

இதேபோல் சல்லிக்கட்டு பாதுகாப்பு பேரவை சார்பில் அமைதி ஊர்வலம் நடைப்பெற்றது. இந்த அமைதி ஊர்வலம் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலத்தில் நடந்தது.

இந்த ஊர்வலத்திற்கு சல்லிக்கட்டு பாதுகாப்பு பேரவையின் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் தலைமை வகித்தார்.

அன்னமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம், ஊரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று முடிவில் மீண்டும் பேருந்து நிலையத்திலேயே நிறைவடைந்தது.

சல்லிக்கட்டு காளையும் ஊர்வலத்தில் கலந்து கொண்டது. அப்போது சல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெரும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.