பக்ரீத் பண்டிகை : சொந்த ஊருக்கு போறவங்களுக்கு சிறப்பு ரயில்.. குட்நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே..
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பக்ரீத் அன்று சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டு, புத்தாடைகள் அணிந்து இஸ்லாமியர்கள் பக்ரீத் வாழ்த்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். இஸ்லாமிய தூதர்களில் ஒருவரான இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பக்ரீத் திருநாளில், இறைவனுக்கு ஆடு போன்ற உயிரினங்களை பலி கொடுத்து 3 சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை வீட்டுக்கும், மற்றொரு பங்கை அண்டை வீட்டாருக்கும், இன்னொரு பங்கை ஏழை, எளிய மக்களுக்கும் வழங்கி இஸ்லாமியர்கள் ஈகை திருநாளை கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளதால் வெளியூர்களில் வசிக்கும் இஸ்லாமியர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். மேலும் ஜூலை 1, 2 வார இறுதி என்பதால், ஜூன் 30 (வெள்ளிக்கிழமை) ஒருநாள் மட்டும் விடுமுறை போட்டுவிட்டால், 4 நாட்கள் தொடர் விடுமுறையாக கொண்டாடவும் பலர் திட்டமிட்டுள்ளனர். இதனால் தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கு ஏதுவாக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று (ஜூன் 28) இரவு 11.15 மணிக்கு சென்னை செண்ட்ரலில் இருந்து கரிப்ரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூருக்கு நள்ளிரவு 12.10 மணிக்கும், தாம்பரம் ரயில் நிலையத்திற்கு 12.43 மணிக்கும் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு நாளை காலை 11.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இதே போல் நாளை (ஜூன் 29) பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் இந்த ரயில் ஜூன் 30 அதிகாலை 3.45 மணிக்கு சென்னை செண்ட்ரல் வந்தடையும். இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், ஸ்ரீ ரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
கறுப்பு உடை சர்ச்சை.. பெரியார் பல்கலைஅறிவிப்பை வாபஸ் பெற்றாலும் சேலத்தில் பதற்றம்.. என்ன காரணம்?