ஆருத்ரா நிதி நிறுவன மோசடி.. 5 மாதமாக இந்தியா பக்கம் வராத R.K சுரேஷ் - போலீசாரின் அடுத்த மூவ் இதுதானா?
ஆருத்ரா நிறுவனம் சுமார் 2300 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளது
எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால், உங்களுக்கு 25 முதல் 30 சதவிகிதம் கூடுதல் வட்டி கிடைக்கும் என்று அவர்கள் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி, ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முதலீடு செய்து வந்தனர். சென்னை அமைந்தக்கரை பகுதியை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் தான் இந்த ஆருத்ரா கோல்ட் நிறுவனம்.
பல மடங்கு நமக்கு வட்டி கிடைக்கபோகிறது, இனி நமக்கு நல்ல காலம் தான் என்று நம்பி பணம் கட்டிய மக்களுக்கு, சில மாதங்களுக்கு முன்பு கிடைத்த அதிர்ச்சி செய்தி தான், ஆருத்ரா நிறுவனம் சுமார் 2300 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளது என்ற தகவல். பிள்ளைகளின் படிப்பு, கல்யாணம், புது வீடு என்று பல கனவுகளோடு பணம் கட்டியவர்கள் நெஞ்சில் இடி வந்து விழுந்தது.
முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் கூடுதல் டி.ஜி.பி அபின் தினேஷ் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு, இதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய இயக்குனர் பாஸ்கர் உள்பட 11 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : மகிழ் திருமேனியையும் கழட்டிவிடப் போகிறாரா அஜித்?
இந்நிலையில் இந்த மோசடி வழக்கில் பிரபல நடிகரும், தயாரிப்பாளரும், பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில துணைத்தலைவராகவும் உள்ள ஆர்.கே. சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மோசடி செய்துள்ள ஆருத்ரா நிறுவனத்திடம் இருந்து சுரேஷ் சுமார் 15 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
அதே சமயம் சுரேஷ் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியும் அவர் இன்னும் ஆஜராகவில்லை, மேலும் கடந்த 5மாத காலமாகவே இந்தியா பக்கம் வராமல், அவர் வெளிநாட்டிலேயே தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் துபாய்க்கு தப்பி சென்றிருக்கலாம் என்று நம்பப்படும் நிலையில் சுரேஷ் மீது தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் சுரேஷ் தரப்பில் இருந்து சம்மனை ரத்துசெய்யும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : அந்த நடிகருடனான லிப்லாக் காட்சி.. வாயை டெட்டால் ஊற்றி கழுவினேன்