கறுப்பு உடை சர்ச்சை.. பெரியார் பல்கலைஅறிவிப்பை வாபஸ் பெற்றாலும் சேலத்தில் பதற்றம்.. என்ன காரணம்?
இன்று ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு போராட்டம் நடத்த உள்ளதாக திராவிடர் விடுதலை கழகம் தலைமையிலான கூட்டமைப்பு அறிவித்துளந்தால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களுக்கு பட்டம் வழங்க உள்ளார். ஆனால் இந்த நிகழ்ச்சியின் போது ஆளுநருக்கு கறுப்பு கொடி காட்டி திராவிட விடுதலை கழகம் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.
பொதுவாக தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழா, அல்லது வேறு எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தமிழக ஆளுநர் சனாதானம் குறித்து பேசி வருகிறார். அவரின் சில கருத்துகள் மிகப்பெரிய சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. ஆளுநரின் கருத்துகளுக்கு தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல், பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் “ பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் அனைவரும் கறுப்பு இல்லாத உடைகளை அணிந்து வர வேண்டும். செல்போன்கள் எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும். சேலம் மாவட்ட காவல்துறையின் அறிவுறுத்தலின் படி இது கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெரியார் பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், கறுப்பு உடை அணிந்து வரக் கூடாது என்ற பெரியார் பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோரின் நலனை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
இதனிடையே இன்று ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு போராட்டம் நடத்த உள்ளதாக கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலை கழகம் தலைமையிலான கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் இன்று சேலம் பெரியால் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொள்ள உள்ளார். இதனால் சேலத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.