திமுகவுக்கும் பாஜகவுக்கும் இதுதான் வித்தியாசம்! மற்றொரு பிடிஆர் ஆடியோ வெளியிட்டு அண்ணாமலை ட்வீட்
நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக மற்றொரு சர்ச்சைக்குரிய ஆடியோவை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் 19ஆம் தேதி, 2023 அன்று சமூக வலைதளங்களில் வெளியான ஆடியோ திமுகவினரை திகைக்க வைத்துள்ளது. சர்ச்சைக்குரிய அந்த ஆடியோ பற்றி தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார். அதில் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் தங்கள் வாழ்நாளில் சம்பாதித்ததை விட ஒரு வருடத்தில் அதிக பணம் சம்பாதித்ததாக அவர் குற்றம் சாட்டியதாக பேசி இருந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதில் அளித்த பழனிவேல் தியாகராஜன் "நான் பேசியதாக வெளியான 26 வினாடி ஆடியோ தீங்கிழைக்கும் நோக்கில் ஜோடிக்கப்பட்டது என்று" என்று தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த அண்ணாமலை ஆடியோவை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த குரல் மாதிரியை அளிக்கத் தயாரா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
நான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது! நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!!
இந்நிலையில், மீண்டும் மற்றொரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். திமுக உள்ளிருந்து சிதைந்து வருகிறது என்றும் கூறியுள்ள அவர், திமுக மற்றும் பாஜக இடையே சரியான வேறுபாட்டைக் காட்டிய நிதி அமைச்சருக்கு சிறப்பு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிடிஆர் பதிலை திமுக ஐடி விங்கை தவிர யாரும் நம்பமாட்டார்கள்: அண்ணாமலை
புதிய ஆடியோவில்...
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குரலில் அண்ணாமலை பகிர்ந்துள்ள ஆடியோவில் பின்வரும் கருத்துகள் கூறப்படுகின்றன.
"நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஒரு நபருக்கு ஒரே பதவி என்ற கொள்கையை ஆதரித்து வருகிறேன். பாஜகவிடம் எனக்குப் பிடித்தது இதுதான். கட்சி மற்றும் மக்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்புகளும் தனித்தனியே இருக்கவேண்டும். இங்கு எல்லா முடிவுகளையும் எம்எல்ஏகளும் அமைச்சர்களும் தான் எடுக்கிறார்கள்.
நிதி மேலீண்மை செய்வது சுலபமாக இருக்கும். இது ஒரு அமைப்பா? அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அத்தனையையும் அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். முதல்வரின் மகனும் மருகனும்தான் கட்சியே...
அவர்களையே நிதி மேலாண்மை செய்யச் சொல்லுங்கள்... அதனால்தான் 8 மாதம் பார்த்துவிட்டு, நான் முடிவு செய்தேன். இது ஒரு நிலையான வழிமுறை அல்ல. எனக்கு இருக்கும் மிகப்பெரிய வசதி என்னவென்றால், இப்போது நான் விலகினால்... இந்தக் குறுகிய காலத்தில் நான் வெளியே சென்றால் அவர்கள் செய்தது அனைத்தும் எதிர்வினையாக அவர்களையே திருப்பி அடிக்கும். நான் இதை எப்படிச் சொல்வது... இந்தப் போராட்டத்தை நான் மிக சீக்கிரம் கைவிட்டுவிட்டதாக என் மனசாட்சி சொல்லாது எனக் கருதுகிறேன்."
லண்டனில் ஜெகன்நாத் கோவில்! ரூ.250 கோடி நன்கொடை வழங்கிய ஒடிசா தொழிலதிபர்!
இவ்வாறு நிதி அமைச்சர் பேசுவதாக அண்ணாமலை வெளியிட்ட அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இது குறித்து பழனிவேல் தியாகராஜன் ட்விட்டர் பதிவு ஒன்றில் ஏற்கெனவே விளக்கியுள்ளார்.
"இந்த காலத்தில் குறைந்த தரத்தில் 26 வினாடிக்கு ஆடியோ கிளிப்பை உருவாக்குவது கடினம் என்று யாராவது நினைப்பவர்களுக்கு இந்த உதாரணம்... செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட குரல்கள் மூலம் ஒரு முழு பாடலே தயாரிக்கப்பட்டுவிட்டது. அதை பல தளங்களில் 16 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டு தான் காட்டியுள்ள உதாரணத்தை விளக்கும் ஆங்கிலச் செய்தி ஒன்றையும் ட்விட்டரில் பகிர்ந்தார்.