Annamalai : பாஜக மாவட்ட தலைவர்களை அதிரடியாக நீக்கிய அண்ணாமலை.! யார் யார் தெரியுமா.?
பாஜகவில் அதிரடி மாற்றங்கள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இரண்டு மாவட்ட தலைவர்கள் மற்றும் ஒரு மாவட்ட பொதுச்செயலாளரை பொறுப்பில் இருந்து நீக்கி அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
பாஜகவில் அதிரடி மாற்றங்கள்
நாடாளுமன்ற தேர்தல் முடிவிற்கு பாஜகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கட்சியை சீரமைக்கும் பணியில் மாநில தலைவர் அண்ணமாலை தீவிரமாக களம் இறங்கியுள்ளார். அந்தவகையில் முன்னாள் தலைவர் தமிழிசையின் பேச்சிற்கு எதிராக மேலிடத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து தமிழிசையை அமித்ஷா நேரடியாக கண்டித்தார். இதனை பயன்படுத்தி தமிழிசையை விமர்சனம் செய்த அண்ணாமலையின் ஆதரவாளராக செயல்பட்ட ஓபிசி அணியின் பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக கருத்து கூறிய காரணத்தால் அக்கட்சியின் மூத்த நிர்வாகி கல்யாணராமன் ஒரு வருடத்திற்கு கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.
இரண்டு மாவட்ட தலைவர்கள் மாற்றம்
இது போன்ற பரபரப்பான சூழ்நிலையில் மேலும் இரண்டு மாவட்ட தலைவர்கள் மற்றும் ஒரு மாவட்ட பொதுச்செயலாளர் கட்சியின் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக பாரத ஜனதா கட்சியின் கீழ்கண்ட மாவட்டத்தில் அவர்கள் வகித்து வரும் கட்சியின் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், திருவாரூர் மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் செந்திலரசன் ஆகிய மூன்று பேரும் விடுவிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன.?
மாவட்ட தலைவர்கள் நீக்கம் தொடர்பாக காரணம் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பாஜக நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பா.ஜ.க. தலைவர் அகோரம் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே இந்த வழக்குகளில் தொடர்புடையவர்களைத்தான் பாஜக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கட்சியின் உறுப்பினர்களாக தொடர்கின்றனர்.
பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா சிறையில்.. ஓரின சேர்க்கை புகாரில் தம்பி சூரஜ் ரேவண்ணா கைது!