கரூரில் நடந்த கூட்ட நெரிசலைத் தொடர்ந்து, வார இறுதியில் பிரசாரம் செய்வதை அண்ணாமலை விமர்சித்துள்ளார். விஜய் தனது பிரசார பயணத்தின் வடிவமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள், வார இறுதியில் பிரசாரம் செய்யும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நடைமுறையை விமர்சித்ததுடன், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
வார இறுதியில் பிரசாரம் கூடாது
இன்று கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "யாருக்கும் தொந்தரவு வரக்கூடாது என்பதற்காக சனிக்கிழமைகளில் பிரசாரம் என்கிறீர்கள். ஆனால், வார இறுதியில் பிரசாரம் செய்வதால் சிறுவர்கள், பெண்கள் வரத்தான் செய்வார்கள். வார இறுதியில் பிரசாரம் செய்ததால்தான் பெண்கள், குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். எல்லா மக்களுக்கும் ஆதரவாக விஜய் இருக்க வேண்டும்" என்றார்
மேலும், "நாம் வளர்ந்த மாநிலம். படித்தவர்கள் அதிகம் இருக்கும் மாநிலம். எதற்காக இப்படி, கோவில், மரம் மேல் ஏறி நிற்க வேண்டும்? உங்கள் தலைவரைப் பார்க்க உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், அதைவிட உங்களின் பாதுகாப்பு முக்கியம். உங்கள் குடும்பத்துக்கு நீங்கள்தான். நீங்கள் போய்விட்டால் உங்கள் குடும்பத்துக்குத்தான் இழப்பு. தயவுசெய்து இதுபோன்ற சூழலை ஏற்படுத்தாதீர்கள். இளைஞர்கள், பெண்கள்... பாதுகாப்பு இல்லாத இடங்களுக்குச் செல்லாதீர்கள்." எனவும்கேட்டுக்கொண்டார்.
விஜய்யின் பயணத்தை மாற வேண்டும்:
இந்தத் துயரச் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த அண்ணாமலை, "இது முதலும், கடைசியுமாக இந்தச் சம்பவம் இருக்கட்டும். இனி இதுபோன்று அரசியல் மாநாட்டில் சம்பவம் நடைபெற்றால் அரசியல் கட்சிகள் வெட்கி தலைகுணிய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
விஜய் தாமதமாக வந்ததற்குக் குற்றம் சொல்ல முடியாது என்றும் அவர் கூறினார். "3 மணி முதல் 10 மணிக்குள் வருவார் என அனுமதி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்சித் தலைவர் வரவில்லை என்றால், பிரசாரம் செய்ய அனுமதிக்காதீர்கள். விஜய் பிரசாரப் பயணத்தின் வடிவமைப்பில் கோளாறு உள்ளது. அதனை மாற்றியமைக்க வேண்டும்" என்றும் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
