கரூர் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த அண்ணாமலை, இந்தத் துயரத்திற்கு மாநில அரசும், மாவட்ட நிர்வாகமுமே காரணம் என குற்றம் சாட்டினார். ஆட்சியர் மற்றும் எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கரூர் மருத்துவமனையில் சந்தித்த பிறகு, முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தமிழக அரசே முதல் பொறுப்பு என்று குற்றம் சாட்டியதுடன், மாவட்ட நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்தார்.
மாநில அரசின் மீதே முதல் குற்றச்சாட்டு
இந்த விபத்து தொடர்பாக எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீதுதான். முதல் தவறு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மீதுதான். அவர்கள் உரிய இடத்தைக் கொடுக்கவில்லை. வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் நடத்த வாய்ப்பே இல்லையெனத் தெரிந்திருந்தும் ஏன் அனுமதி கொடுக்கிறார்கள்? சரியான இடத்தைக் கொடுப்பதுதான் அரசின் கடமை. முடியவில்லை என்றால், கூட்டத்திற்கு அனுமதியே கொடுக்காதீர்கள்.
500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்ததாக பொறுப்பு டிஜிபி சொல்கிறார். Striking Force, Guard, வண்டிக்குள் இருந்தவர்கள் எல்லாம் கணக்கு இல்லை. களத்தில் 100 பேர்கூட இல்லை. போக்குவரத்து காவலர்களோ, சட்டம் ஒழுங்கு காவலர்களோ போதுமான அளவு களத்தில் இல்லை கூட்டம் வருமென தெரியும்... அது 10,000-ஓ 20,000-ஓ, 50,000-ஓ... விடுங்க... அதற்கேற்றபடி கீழே களத்தில் எத்தனை பேர் இருந்தனர்?" என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
கலெக்டரை சஸ்பெண்ட் செய்யுங்கள்
மேலும், கூட்ட நெரிசலுக்குக் காரணமான நிர்வாகக் குறைபாடுகளைப் பட்டியலிட்டு அவர் கண்டனம் தெரிவித்தார். அண்ணாமலை கூறுகையில், இது தவறான இடத் தேர்வு, போதுமான காவலர்கள் இல்லை, அவசர வழிகள் (Emergency Exit) போல எதுவும் இல்லை. எனவே, இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணமான கரூர் மாவட்ட நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, "கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரையும் உடனடியாகச் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்" என்று தமிழக அரசை வலியுறுத்தினார்.
சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்
அண்ணாமலை அவர்கள், தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையத்தை விமர்சித்ததுடன், இந்த வழக்கை உடனடியாக சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
"ஒரு நபர் ஆணையத்தில் நம்பிக்கை இல்லை. வெறும் கண் துடைப்பு கூடாது. தமிழக அரசு தாமாக முன்வந்து இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும். பிரசாரத்தின்போது விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது ஏன்? போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் விடை கிடைக்க சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்," என்று அண்ணாமலை கோரிக்கை விடுத்தார்.
உளவுத்துறை கூட்டத்தின் அளவை கணிக்கத் தவறிவிட்டது என்றும் பாதுகாப்பை உறுதிசெய்வதில் மாநில அரசின் உளவுத்துறை முழுமையாக தோல்வி அடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரியாகச் செய்யத் தவறியதே இத்தனை உயிர்கள் பறிபோனதற்குக் காரணம் என்றும், இந்த விவகாரத்தில் சதி உள்ளதா என்பதையும் மத்திய புலனாய்வுத் துறை கண்டறிய வேண்டும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
