ராமதாஸ் தரப்பு பாமக நமது கட்சி இல்லை என்று அன்புமணி முதன்முறையாக அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொண்டர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் முக்கிய கட்சிகளில் ஒன்றான பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையேயான மோதல் பூதாகரமாக வெடித்தது. மேடையிலேயே ராமதாசும், அன்புமணியும் மோதிக் கொண்டபிறகு இருவரும் கட்சியில் தனித்தனியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் பொதுக்குழு உள்ளிட்ட கூட்டங்களை நடத்தினார்கள்.

பாமகவில் வெடித்த பெரும் மோதல்

தொடர்ந்து இந்த மோதல் பெரிதான நிலையில், பாமகவில் இருந்தே அன்புமணியை நீக்கி அதிரடி காட்டினார் ராமதாஸ். மேலும் அன்புமணி தனது இன்ஷியலை பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் தனிக்கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 'நாங்கள் தான் உண்மையான பாமக. எங்களுக்கு தான் அங்கீகாரம் வழங்க வேண்டும்' என ராமதாஸ் தரப்பும் அன்புமணி தரப்பும் போட்டி போட்டு தேர்தல் ஆணையம் சென்றனர்.

ராமதாஸ், அன்புமணி சண்டை

அன்புமணி மீது ராமதாஸ் 'வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தார்' என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிய நிலையிலும் ராமதாஸை அன்புமணி தாக்கி பேசவில்லை. ஜி.கே.மணி உள்ளிட்ட சிலர் ராமதாஸை ஆட்டிப்படைப்பதாகவும் கூறி வந்தார். மேலும் செய்தியாளர்களிடமும் 'இது எங்கள் உட்கட்சி பிரச்சனை' என்று தான் கூறி வந்தார். இந்த நிலையில் முதன் முறையாக 'பாமக நமது கட்சி இல்லை' என்று அன்புமணி அதிரடியாக பேசியுள்ளார்.

பாமக நம்ம கட்சி இல்லை

அதாவது அன்புமணி பங்கேற்ற ஒரு கூட்டத்தில் பேசிய பாமக நிர்வாகி ஒருவர், ''தமிழ்குரன்னு சொல்லி பேரு. ஒரு தேர்தலை சந்தித்தார். 2010க்கு அப்புறம் 2025ல் தான் அவரை பார்த்தேன். ஒரு இடைத்தேர்தலை சந்தித்தவர். ஆனால் அவர் வந்த உடனே கட்சியினுடைய (பாமக) மாநில இளைஞரணி தலைவர் பதவி கொடுத்துட்டாங்க. இதைத் தட்டிக் கேட்க அன்புமணி..'' என்று அவர் பேச்சை முடிப்பதற்குள் அருகில் இருந்த அன்புமணி அவரை அழைத்து அது (பாமக) நம்ம கட்சி கிடையாது'' என்று மைக்கில் அவரிடம் தெரிவித்தார்.

தொண்டர்கள் ஷாக்

அன்புமணி கூறியதை கேட்டதும் மேடையில் இருந்த நிர்வாகிகள் கைதட்டி வரவேற்றனர். தொடர்ந்து பேசிய அந்த நிர்வாகி, ''அண்ணனே சொல்லிட்டாரு அது நம்ம கட்சி இல்லை என்று. இதுதான் நமது அண்ணன் பக்கம் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி'' என்றார். இதுவரை பாமக உட்கட்சி பிரச்சனையை சைலண்டாக டீல் செய்து வந்த அன்புமணி, முதன் முறையாக ராமதாஸ் ஆரம்பித்த பாமக நம்ம கட்சி இல்லை என்று வைலண்ட் ஆக மாறியுள்ளார். இது பாமக தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.