அன்புமணியை இனி விடக்கூடாது.! செம பிளான் போட்ட ராமதாஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
ராமதாஸ் தனது மகள் காந்திமதியை கட்சியின் புதிய செயல் தலைவராக நியமித்துள்ளார். இந்த நியமனத்திற்கும், அன்புமணிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் பெற, நவம்பர் 1ஆம் தேதி மாநிலம் தழுவிய செயற்குழு கூட்டத்திற்கு ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

பாமகவில் உட்கட்சி மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு நடந்த பாமக புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழுவில், ராமதாஸ் தனது மகள் வழி பேரன் முகுந்தன்வை இளைஞர் அணித் தலைவராக அறிவித்தார்.
இதற்கு அன்புமணி மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல் வெடித்தது. அப்போது தொடங்கிய மோதல் கட்சி இரண்டாக பிளவு படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கட்சியில் மட்டுமில்லாமல் குடும்பத்திலும் பிளவை உருவாக்கியுள்ளது.
ராமதாஸ் தன்னை "நிறுவனர் மற்றும் தலைவர்" என்று அறிவித்து, அன்புமணியை "செயல் தலைவர்" ஆக்கினார். அடுத்ததாக கட்சியில் இருந்தும் அன்புமணி நீக்கப்பட்டார். ஆனால் இதனை ஏற்க மறுத்த அன்புமணி, தேர்தல் ஆணையம் தன்னை தலைவராக அங்கீகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தேர்தலில் சின்னங்களை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தனக்கு மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த பரபரப்பான நிலையில் அன்புமணிக்கு டப் கொடுக்கும் வகையில் தனது மகள் காந்திமதிக்கு பாமக செயல் தலைவர் பொறுப்பு வழங்கி அதிரடி காட்டியுள்ளார் ராமதாஸ்.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் பாமகவின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். நவம்பர் 1ஆம் தேதி செயற்குழு கூட்டத்தை நடத்தவும் அந்த அந்த மாவட்டங்களில் தலைமை நிர்வாகம் சார்பில் கலந்து கொள்பவர்களின் பட்டியலையும் ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் சென்னையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் பாமக மூத்த தலைவர் ஜி.கே.மணி கலந்து கொள்வார் எனவும், கடலூரில் பாமக செயல் தலைவர் ஶ்ரீகாந்தி பரசுராமன், அரியலூரில் பு.த. அருள்மொழி, திருவண்ணாமலையில் தீரன், விழுப்புரத்தில் முரளி சங்கர், தஞ்சாவூர் எம்எல்ஏ அருள் உள்ளிட்ட 37 மாவட்டங்களுக்கு பங்கேற்கும் நிர்வாகிகள் அறிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் செயல் தலைவராக தனது மகள் காந்திமதி பொறுப்பு வழங்கப்பட்டதற்கு ஒப்புதல் வழங்கியும், அன்புமணிக்கு எதிராக ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு ஒப்புதல் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை தேர்தல் அணையத்திற்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெறவும் ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.