தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. இதனை எதிர்க்கும் திமுகவுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது.

S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக முழு மனதுடன் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கை:

இயல்பான நடைமுறை

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இரட்டை வாக்குகள், இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்தவர்ளை நீக்குவதும், புதிதாக தகுதி உள்ளவர்களை சேர்ப்பதும் அவ்வப்போது சுருக்கத் திருத்தம் மற்றும் தீவிர திருத்தம் முறைகளை பின்பற்றி சரியான வாக்காளர் பட்டியலை உறுதிபடுத்துவது இயல்பான ஒரு நடைமுறை.

அதிமுக தொடர்ந்து வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் தற்போதுள்ள வாக்காளர் பட்டியல் 100 சதவீத சரிபார்ப்பு இல்லாமல் முழுமையானதாக இல்லை என்பதால், வாக்காளர் பட்டியலை முழுமையாக ஆய்வு செய்யுங்கள் என்று அதிமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலின்போது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், அந்தத் தொகுதியில் வசிக்காத 40 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.

தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை

அதேபோல், சுமார் 8 ஆயிரம் இறந்த வாக்காளர்களின் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதற்கான ஆதாரங்களை கழகத்தின் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு புகாராகக் கொண்டு சென்றும், தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. அதேபோல், 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகம் முழுவதும் இரட்டை வாக்குகள், இறந்தவர்கள் மற்றும் முகவரி மாற்றம் செய்தவர்களின் பெயர்கள் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்டத் தேர்தல் அலுவலர்களிடமும், இந்திய தேர்தல் ஆணையத்திடமும் புகார்கள் கொடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2024-ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில், இரட்டை வாக்குகள், முகவரி மாற்றம் மற்றும் இறந்தவர்கள் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்படவில்லை என்றும் இப்படி சுமார் 44 ஆயிரம் நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று சென்னையில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியிடம் உரிய ஆதாரங்களுடன் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

முழு மனதுடன் வரவேற்பு

அதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆர்.கே. நகர் தொகுதியில் மட்டும் இன்றுவரை சுமார் 31 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கின்போது சென்னை மாநகர் முழுவதும் இதுபோன்று பல்லாயிரக்காண பெயர்கள் வாக்காளர் பட்டியலில் முறைகேடாக இடம்பெற்றுள்ளதை நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டினோம். எனவே, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள எஸ்.ஐ.ஆர் எனப்படும் 'சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அதிமுக முழு மனதுடன் வரவேற்கிறோம்.

நடுநிலையோடு செயல்பட வேண்டும்

இந்திய தேர்தல் ஆணையம் இந்த சிறப்பு தீவிர திருத்தத்தை முறையாகவும், வெளிப்படையாகவும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பணிகளையெல்லாம் மாநில அரசின் கீழுள்ள அலுவலர்கள்தான் செய்யப்போகிறார்கள் என்பதால், தேர்தல் ஆணையம் அவர்கள் நடுநிலையோடு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

அதிமுக உறுதி

தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருக்கும் குளறுபடிகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, 100 சதவீதம் வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கப்பட்டு, தங்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்கக் கூடிய உரிமை, உண்மையான வாக்காளர்களுக்குத் தான் வழங்கப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதி கொண்டுள்ளது.

விளம்பர திமுக ஆட்சி

கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழ் நாட்டு மக்களின் நலனுக்காக எந்தவித நலத் திட்டங்களையும் செயல்படுத்தாமல், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பணிகளை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைப்பது; இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக விளங்குவது; வாங்கும் கடனையெல்லாம் வருவாய் செலவினங்களுக்கே செலவிட்டுவிட்டு, விளம்பர ஆட்சி நடத்தி வரும் திமுக ஸ்டாலின் மாடல் பெயிலியர் ஆட்சியில், மக்கள் படும் துன்பங்களுக்கு 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்;

மக்களுக்கு நல்லது செய்யுங்கள்

அத்தேர்தலில் திமுக தோல்வியுறுவது உறுதி, என்று தெரிந்தவுடன் இப்போதே அதற்கான காரணங்களைத் தேடும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், இனியாவது தங்களது தவறுகளை திருத்திக்கொண்டு, எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டு, மீதமுள்ள ஒருசில மாதங்களுக்காவது தமிழக மக்களுக்கு நல்லதைச் செய்ய வலியுறுத்துகிறேன். சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை ஆணையம் முறையாக வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும். பணிகளை மாநில அரசு ஊழியர்களே செய்வார்கள் என்பதால் நடுநிலையோடு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.