தமிழகத்தில் SIR எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் இன்று முதல் தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. முதலில் பீகாரில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொண்ட நிலையில், அங்கு மொத்தமுள்ள 7.9 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் பேர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி
S.I.R என்ற பெயரில் சிறுபான்மையினர் உள்பட தங்களுக்கு வாக்களிக்காதவர்களின் பெயர்களை தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக அரசு நீக்குவதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையி, தமிழ்நாடு, கேரளா, அந்தமான் நிக்கோபார், சத்தீஸ்கர், கோவா, குஜராத்,
லட்சத்தீவுகள், மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் இன்று முதல் தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கூட்டணி கட்சிகளின் ஸ்டாலின் அவசர ஆலோசனை
SIR அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் இன்றிரவே வாக்காளர் பட்டியல்கள் முடக்கப்பட்டு பணிகள் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் ஆணையம் SIR அறிவித்துள்ள நிலையில், சென்னை அண்ணா அறிலாயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு
இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களான காங்கிரசின் தங்கபாலு, மதிமுகவின் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் மற்றும் விசிக, கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அடுத்து என்ன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்?
ஆலோசனையில் என்ன பேசப்பட்டது?
SIR மூலம் மக்களின் வாக்குரிமையை பறிக்கும் பாஜக அரசின் செயலை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் SIR
க்கு எதிராக போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மூலம் தேர்தல் ஆணையம் விதிமுறைகளை மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், இந்த அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
