நெல் கொள்முதல் 10 லட்சம் டன் குறைந்ததற்கு காரணம் என்ன.?குவிண்டாலுக்கு 3000 ஆக உயர்த்தி நிர்ணயித்திடுக-அன்புமணி

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு குறைந்ததற்கான காரணங்கள் என்னென்ன? என்பதை அரசு ஆய்வு செய்து  குறைகளைக் களைய வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Anbumani has questioned what is the reason for the decrease in paddy procurement by 10 lakh tonnes KAK

குறைந்தது நெல் கொள்முதல்

தமிழ்நாட்டில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில்  ஏறக்குறைய 10 லட்சம் டன் அளவுக்கு குறைந்திருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  2021-22ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 43.27 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 2022-23ஆம் ஆண்டில்  மே மாதம் 15-ஆம் தேதி  வரையிலான காலகட்டத்தில் 37 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.  நடப்பாண்டின்  இதே காலத்தில் 3.71 லட்சம் உழவர்களிடமிருந்து  27.61 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு  முழுவதும்  கணக்கில் கொண்டால் 44.22 லட்சம் டன் நெல் கொள்முதல்  செய்யப்பட்டது.   

அதிமுக மாஜி அமைச்சரின் உதவியாளர் கஞ்சா விற்பனை.. ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் கூட்டணி- சீறும் டிடிவி

50 லட்சம் டன் இலக்கு

நடப்பு கொள்முதல் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ளது என்றாலும் கூட இனிவரும் மாதங்களில் பெரிய அளவில் நெல் கொள்முதல் செய்யப்படுவதற்கு வாய்ப்பு இல்லை.  கடந்த இரு ஆண்டுகளின் நெல் கொள்முதல் அளவை  நெருங்குவதற்குக் கூட வாய்ப்பு இல்லை.  நெல் கொள்முதல் அளவு  குறைந்து வருவது கவலை அளிக்கிறது. 2023-24ஆம் ஆண்டில் மொத்தம் 50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில்  இலக்கில் 60 விழுக்காட்டைக் கூட  அரசால் எட்ட முடியாது என்பது தான் உண்மை. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில்  காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறக்கவில்லை என்பதால் பாசனப் பரப்பு கணிசமாக குறைந்தது.  ஆனால், நெல் கொள்முதல் அளவு குறைந்ததற்கு இதை மட்டுமே காரணமாகக் கூற முடியாது.

கொள்முதல் நிலையங்களில் காத்துக்கிடக்கும் நிலை

ஒரு குவிண்டால் நெல்லுக்கு  குறைந்தது ரூ.3000 கொள்முதல் விலை வழங்க வேண்டும் என்பது தான் உழவர்களின் கோரிக்கை ஆகும். ஆனால், மத்திய அரசு நிர்ணயித்த  கொள்முதல் விலையுடன் தமிழக அரசு முறையே  ரூ.100, ரூ.75 ஊக்கத்தொகை சேர்த்து சன்னரக நெல்லுக்கு ரூ.2310,  சாதாரண ரக நெல்லுக்கு ரூ.2265 வீதம் மட்டுமே கொள்முதல் விலை வழங்குகிறது. இந்த விலைக்கு உழவர்கள் நெல்லை விற்க கொள்முதல் நிலையங்களில் பல நாட்கள் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது.  அதுமட்டுமின்றி, கொள்முதல் நிலையப் பணியாளர்களுக்கு மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு வழங்க வேண்டியுள்ளது.

அதேநேரத்தில் நடப்பாண்டில் தனியார்  நெல் வணிகர்கள் குவிண்டாலுக்கு  ரூ.2500 முதல் ரூ.2700 வரை கொள்முதல் விலை வழங்கியதுடன், உழவர்களின் களத்துக்கே சென்று நெல்லை கொள்முதல் செய்தனர். அதனால், உழவர்களுக்கு கைமீது  அதிக தொகை கிடைத்ததால் பெரும்பான்மையான உழவர்கள் தனியாரிடம் நெல்லை  விற்பனை செய்தனர். அரசின் நெல் கொள்முதல் அளவு குறைந்ததற்கு இதுவும் முக்கியக் காரணம் ஆகும். இதை தமிழக அரசு உணர வேண்டும்.

நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.3000ஆயிரம்

இதை உணர்ந்து தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு குறைந்ததற்கான காரணங்கள் என்னென்ன? என்பதை அரசு ஆய்வு செய்து  குறைகளைக் களைய வேண்டும். முதல் நடவடிக்கையாக நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக உயர்த்தவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு உழவர்கள் சென்றால் உடனடியாக நெல் மூட்டைகளை விற்பனை செய்து, பணத்தைப் பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

உடலில் கல்லோடு சேர்த்து கம்பி சுற்றியிருக்கு.!! தற்கொலை செய்பவர்கள் இப்படி செய்யமாட்டாங்க - திருநாவுகரசர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios