தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் : தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் பள்ளியில் முககவசம் அணிய வேண்டுமா.? என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது தொடர்பாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 13 வகையான கல்வி உபகரண பொருட்களை மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார். பாடப் புத்தகம், நோட்டு புத்தகம், உலக வரைபடம், கலர் பென்சில், புத்தகப்பை, ஷு என 13 வகையான கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டம்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 2025-2026 கல்வி ஆண்டிற்கான கல்வி உபகரண பொருட்களை வழங்கும் நிகழ்வினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதற்கு முந்தைய கல்வி ஆண்டுகளில் 13 வகையான கல்வி உபகரண பொருட்களும் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டதில்லை. இந்தாண்டு ஒரே நேரத்தில் 13 வகையான கல்வி உபகரண பொருட்கள் 1141 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்கள் முழு தரத்துடன் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் தொடங்கப்பட்ட முதல் வாரத்தில் மாணவர்களுக்கு மனநலன் சார்ந்த அறிவுரைகள் வழங்கப்படும் என தெரிவித்தார். எல்லோரும் சேர்ந்து மாணவர்களை நல்வழிப்படுத்துவது அனைவரின் கடமை. பல்வேறு சாதனைகள் புரிந்து கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு கல்வி முறையிலும் மன ரீதியிலும் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
வீரியம் இல்லாத கொரோனா பாதிப்பு பயப்பட தேவையில்லை
பள்ளிகள் இன்று தொடங்கப்பட உள்ள நிலையில் கொரோனா தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசினோம். பயப்பட தேவையில்லை என அறிவுரை வழங்கி உள்ளார். வீரியம் இல்லாத பாதிப்பு தான். கவலைப்பட தேவையில்லை. இயல்பான வாழ்க்கையே இருக்கலாம் என தெரிவித்தார். ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால் தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை பள்ளி கல்வி மற்றும் கல்லூரி கல்வி என இரண்டுக்கும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை முதல்வரிடம் உள்ளது. தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையில் பள்ளி கல்விக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
