சீனாவில் உருவான கொரோனா வைரஸ் மீண்டும் உலக நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
சீனாவில் உருவான கொரோனா
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சென்றது. இதனால் கொத்து கொத்தாக பொதுமக்கள் மக்கள் உயிழந்தனர். அதுமட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உயிரிழந்தனர். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவு இல்லாமல் சிக்கி தவித்தனர். பின்னர் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மெல்ல மெல்ல பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திருப்பினர்.
மீண்டும் மிரட்டும் கொரோனா
இந்நிலையில் கொரோனா மீண்டும் மிரட்ட தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். ஹாங்காங், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. தற்போது இந்தியாவிலும் கிடுகிடுவென பாதிப்பு உயர்ந்து வருகிறது.
கிடுகிடுவென உயரும் பாதிப்பு
இந்தியாவில் கேரளா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை நாட்டில் 2710 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்
அதிகபட்சமாக கேரளாவில் 1,147 பேருக்கும், மகாராட்டிராவில் 424, டெல்லி 294, குஜராத் 223, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 148 பேருக்கு, மேற்கு வங்கத்தில் 116 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் இரண்டு, டெல்லி, குஜராத், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து கர்நாடகா மற்றும் கேரளா, தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது..


