ஸ்டாலின் வீட்டிற்குப் போக உள்ளார், எடப்பாடி பழனிசாமி கோட்டைக்கு வர உள்ளார் என்று வைகைச் செல்வன் எச்சரிக்கை விடுத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கையும், அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத திமுக அரசையும் கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் இன்று உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் வைகைச் செல்வன் மற்றும் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர். உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கான புதிய கட்டிடம் உடனடியாக முடிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக அரசுக்கு நேரடி எச்சரிக்கை

ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைகைச் செல்வன்: இன்னும் ஏழு மாதங்களில் ஸ்டாலின் வீட்டிற்குப் போக இருக்கிறார். ஏழு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி கோட்டைக்கு வர உள்ளார் என்று ஆளும் திமுக அரசுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்தார். பாமக அதிமுக கூட்டணியில் இருக்கிறதா என்ற கேள்விக்கு, "போகப் போகத் தெரியும்" என்று பாட்டுப்பாடி ராமதாஸ் பாணியில் நக்கல் அடித்தார். மேலும், அமித் ஷா கூட்டணி ஆட்சிக்கு 'எஸ்' என்று கூறிய நிலையில், தங்கள் பொதுச்செயலாளர் அதற்கு 'நோ' என்று சொல்லிவிட்டதாகவும் தெரிவித்தார். திருமாவளவனின் விசிக, பாமக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இணைந்து பயணித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய வைகைச் செல்வன், கூட்டணி என்பது பொது எதிரியை வீழ்த்துவதற்காக ஒன்று சேர்வார்கள் என்றார்.

அடுத்த முறை திமுக வரக்கூடாது

இந்தியாவின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் பேசிய அவர், "இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு எந்தக் கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்ற அடிப்படையில் தான் இந்தியா முழுவதும் வாக்களிக்கிறார்கள். இன்று பாஜக மத்தியில் ஆண்டு கொண்டிருக்கிறது. தப்பித்தவறி காங்கிரஸ் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் பாஜகவை ஆதரிக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அடுத்த முறை திமுக வரக்கூடாது என்பதற்காக, அந்த வாய்ப்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

திருச்சி சிவாவுக்கு கண்டனம்

காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசியது வன்மையான கண்டனத்திற்குரியது என வைகைச் செல்வன் குறிப்பிட்டார். பெருந்தலைவர் காமராஜர் அப்பழுக்கற்ற மகத்தான தலைவர். பெருந்தலைவர் காமராஜரைத் தரை குறைவான வார்த்தைகளில் விமர்சித்தவர் கருணாநிதி. அவருடைய கட்சியும் மாடி வீட்டு ஏழை எனக் கொச்சைப்படுத்தியது. அப்படிப்பட்ட திமுகவின் பழைய பழக்கம் அவர்களுடைய இரத்தத்தில் இருக்கிறது. அதன் ஒரு பகுதிதான் திருச்சி சிவாவின் கருத்து" என்றும் அவர் கடுமையாக சாடினார்.