அஜித் குமார் கொலை வழக்கில் நிகிதாவை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்தார்.
காட்டுமன்னார்கோவிலில் தமிழ் தேசிய அரசியல் போராளி கலியபெருமாள் மற்றும் சமூகநீதி பெருங் காவலர் ஆனைமுத்து இவர்களின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த கலியபெருமாள் மற்றும் ஆனைமுத்து, இளையபெருமாள் ஆகியோர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சீமான்
தொடர்ந்து மேடையில் கலியபெருமாள் மற்றும் ஆனைமுத்து, இளையபெருமாள் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதைகள் வீடியோவாக ஒளிபரப்பப்பட்டது. இதனையடுத்து பேசிய சீமான்: கலியபெருமாள் ஆனைமுத்து அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி எடுத்து கூறினார். இட ஒதுக்கீட்டு நாயகன் தாத்தா ஆனைமுத்து சாதனையை பாராட்டியவர் பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் மற்ற எந்த கட்சிகளும் அவரது சாதனையை பாராட்டவில்லை. இந்த நாட்டிலே தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் தான் அதிகம் அவர்களுக்கு அதிகாரம் இதுவரை வழங்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைக்க வேண்டும். வருகின்ற எட்டாம் தேதி எனது தலைமையில் அஜித் உயிரிழப்பு தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பாக திருபுவனத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என என பேசினார்.
இதுதான் உயிருக்கு மதிப்பா?
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான்: அஜித் குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக நிகிதாவை சேர்த்து அவரை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும். காவலர்களால் தாக்கப்பட்டு உயிர் இழந்த அஜித் குமார் அம்மாவை சந்தித்து விட்டு போராட்டதை தொடருவோம். மேலும் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் அரசு 10 லட்சம் தருகிறது. காவலர்கள் தாக்கி உயிரிழந்தால் 5 லட்சம் தருகிறது. எளிய மகன் நானே எங்கள் அம்மாவிற்கு 5 லட்சம் தருகிறேன். இதுதான் உயிருக்கு மதிப்பா என சீமான் பேசினார்.
அஜித்குமார் கதறும் வீடியோ வைரல்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்துள்ள மடப்புரம் பத்தரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவர் அஜித்குமார். நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் அஜித்குமாரை அழைத்து சென்று போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் போலீசார் இரும்பு கம்பியால் தாக்கும் வீடியோ மற்றும் அஜித்குமார் கதறும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை எற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கும், டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அஜித்குமார் சகோதரர் நவீனுக்கு அரசு பணி
போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் சகோதரர் நவீனுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். மேலும், அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும், முதற்கட்டமாக அரசு தரப்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் அஜித்குமாரின் தாய், சகோதரரிடம் தொலைபேசியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும் என தெரிவித்திருந்தார்.
