- Home
- Tamil Nadu News
- சினிமா பாணியில் பயங்கரம்! தவாக மாவட்ட செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை! பழிக்குப் பழியா?
சினிமா பாணியில் பயங்கரம்! தவாக மாவட்ட செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை! பழிக்குப் பழியா?
காரைக்கால் மாவட்ட தவாக செயலாளர் மணிமாறன் மயிலாடுதுறையில் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். காரில் வந்த மர்ம கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (32). இவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று காலை மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தவாக கட்சி கூட்டத்தில் பங்கேற்று விட்டு காரில் காரைக்கால் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது செம்பனார் கோயில் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு எதிரே சென்று கொண்டிருந்த போது இரு கார்களில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் மணிமாறன் சென்ற காரை வழி மறித்துள்ளனர்.
ஓட ஓட விரட்டி படுகொலை
பின்னர் பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய அந்த கும்பல் காரின் முன்புற கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மணிமாறன் காரில் இருந்து இறங்கி சாலையில் ஓடியுள்ளார். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். தலை மற்றும் முகம் சிதைந்த மணிமாறன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து வந்த காரிலேயே தப்பித்து சென்றது.
5 தனிப்படைகள் அமைப்பு
இந்த சம்பவம் தொடர்பாக செம்பனார்கோயில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மணிமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டனர்.
பழிக்கு பழி
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி காரைக்கால் மாவட்ட பாமக செயலாளராக இருந்த தேவமணி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மணிமாறன் முதல் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை வழக்கில் ஜாமீனில் வந்த நிலையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடைபெற்றதா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் தவாக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
வேல்முருகன்
இந்த சம்பவத்திற்கு தவாக தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மணிமாறன் மறைவுக்கு காரணமான, கூலிப்படையை விரைந்து கைது செய்து, அக்கும்பலுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. மணிமாறன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.