அதிமுகவில் ஒன்றிணைவு குறித்து கே.சி. பழனிசாமி தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாஜகவின் தலையீடு குறித்தும், அதிமுக தொண்டர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதிமுக நிலை குறித்து எக்ஸ் தள பக்கத்தில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எந்த இடத்திலும் பாஜக சூழ்நிலைகளை பயன்படுத்திக்கொண்டு கூட்டணி ஆட்சி அமைக்கவோ, அதிமுக வாக்குகளை சிதைக்க தொண்டர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: செங்கோட்டையன் அவர்களின் ஒன்றிணையவேண்டும் என்கிற கருத்து வரவேற்கத்தகுந்தது, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கே.சி.பியால் முன்னெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பு முயற்சிக்கு ஏகோபித்த தொண்டர்களின் ஆதரவு இருந்தது, செங்கோட்டையன் அவர்களும் அந்த கருத்துக்களை மட்டும் சொல்லும்பொழுது தொண்டர்கள் ஆதரித்தார்கள்.

அதிலும் கூட தினகரன் தனி கட்சி, அவர் கூட்டணியில் மட்டும் தான் இணையமுடியும், சசிகலா அவர்களும் அரசியலில் இருந்தே ஒதுங்கிக்கொண்டார் அது மட்டும் அல்லாமல் இன்னும் தான் பொதுச்செயலாளர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் எனவே அவர் இணைய வாய்ப்பு குறைவு, "எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சர் வேட்பாளராக இருக்கட்டும், அவரே பொதுச்செயலாளராக இருக்கட்டும் எந்த நிபந்தனையும் இல்லை" என்று ஓ.பி.எஸ் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். கே.சி.பி போன்றவர்களும் இணைப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

எனவே இணைக்கப்பட வேண்டியது கே.சி.பியும், ஓ.பி.எஸ்-ம் தான் அதன்பின் தினகரனுடன் கூட்டணி, இப்படியிருக்கிற சூழ்நிலையில் அந்த கருத்து அதனை தொடர்ந்த நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும் உடனடியாக டெல்லி சென்று அமித்ஷா அவர்களை சந்திப்பது சென்ற முறை "பாஜகவுடன் கூட்டணி இல்லை" என்று எடப்பாடி அறிவித்த போது எடப்பாடி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது நிலுவையில் இருக்கிற வழக்குகளை காட்டி மிரட்டி கூடவே செங்கோட்டையனை முன்னிறுத்தி கட்சியை பிளந்துவிடுவோம் என்று பயமுறுத்தி பாஜகவுடன் கூட்டணி வேண்டும் என்று வலியுறுத்த வைத்தது போல, இம்முறையும் கூட்டணி ஆட்சிக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அதை அடைவதற்கு பாஜக முயற்சிக்கிறதா? என்கிற சந்தேகம் அதிமுக தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஒன்றிணைய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எந்த இடத்திலும் பாஜக சூழ்நிலைகளை பயன்படுத்திக்கொண்டு கூட்டணி ஆட்சி அமைக்கவோ, அதிமுக வாக்குகளை சிதைக்கவோ அதிமுக தொண்டர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.