சேலத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, திமுகவின் ஊழல் மற்றும் கொள்கையற்ற அரசியலை விமர்சித்தார். விஜய் மட்டுமே பாஜகவை எதிர்க்கும் தலைவர் என்றும், தமிழக வெற்றிக் கழகம் பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்றும் உறுதி அளித்தார்.
Vijay Anti-BJP Stance : தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநில கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சேலம் போஸ் மைதானத்தில் நடைபெற்றது.இதில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ஒட்டுமொத்த இளைஞர்கள் கூட்டமும் தமிழக வெற்றிக்கழகத்தில் தான் உள்ளது. தற்போது ஒட்டுமொத்த கொங்கு மண்டலத்திற்கு சவால்விட்டு தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறோம்..
திமுகவில் பேசுவதற்கு ஆள் இல்லை
ஐஏஎஸ் அதிகாரிகள் எல்லாம் போட்டு செய்தியாளர் சந்திப்பு கொடுக்கிறார்கள்; பேசிப் பேசி வளர்ந்த கட்சிக்கு, தற்பொழுது திமுகவில் பேசுவதற்கு ஆள் இல்லை. தமிழக வெற்றிக்கழகத்தை பற்றி எத்தனையோ கேள்விகள் வருகிறது. ஆனால் திமுக பற்றி எந்த கேள்விகளும் வரவில்லை. திமுக என்றால் கட்டிங் ஷேரிங் இவை மட்டுமே. அண்ணாவுடன் இளைஞர் கூட்டம் புதிய ஆட்சியை உருவாக்கியது. சமூகநீதி, பெரியாரிசம், மார்க்சிசம் எல்லாவற்றையும் பேசி எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைபாடு, ஆளும் கட்சியான உடன் கொள்ளை மட்டுமே ஒரே கொள்கை, அமைச்சர்களையும், குடும்பத்தையும் உருவாக்கியது தான் கலைஞரின் வெற்றி என விமர்சித்தார்.
பாஜக வளர்வதற்கு திமுக தான் காரணம்
கருணாநிதி கொள்கையில் சில இடங்களில் பெரியாருடன் கொள்கையில் ஒற்றுப்போவார். ஊழலை குடும்பம் முழுவதும் பரப்பி விடுவார். ஆனால் தற்பொழுது உள்ள முதல்வருக்கு என்ன வேறுபாடு என்றால் கொள்கை இல்லை கொள்ளை, ஊழல் மட்டும் தான், திமுக எங்கு வலுவிழந்து கிடைக்கிறது, எதனால் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு திமுகவின் ஊழல்தான் பாஜகவை வளர்த்துக் கொண்டிருக்கிறது.
எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆகியோர் எந்த கொள்கையுடன் அதிமுகவை ஆரம்பித்து நடத்தினார்களோ; அந்த குறிக்கோளின் ஒற்றை நம்பிக்கை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மட்டும் தான். கொள்கையற்ற அரசியலால் தான் சுலபமாக கடந்த மூன்று தேர்தலில் வெற்றி பெற்றது, ஆனால் இனி வெற்றி பெற முடியாது. ஏனென்றால் உங்களை எதிர்த்து அரசியல் செய்யக்கூடியவர்கள் பாஜகவிடம் சரணடைந்தவர்கள் அல்ல,
பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை
பாஜகவை துணிந்து எதிர்க்கின்ற ஒரே தலைவர் விஜய் தான். குர்ஆன் மீது ஆணையிட்டு கூறுகிறோம்; எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணியும் உறவும் கிடையாது என்று அழுத்தமாக உறுதியுடன் கூறுகிறோம் என்றார். பெரியார் இறக்கவில்லை அவரை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள தான், விஜய் தமிழக வெற்றிக் கழக கட்சியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அரசியலில் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக, ஒரே முதல்வர் வேட்பாளர் தலைவர் விஜய் மட்டும் தான். அடுத்த நான்கு மாதத்தில் அனைத்தும் புரியும் எப்படி ஒரு புரட்சி தலைவர் விஜய் உருவாக்கப் போகிறார் என்று தெரியும் என ஆதவ் அர்ஜூனா பேசினார்.
