கரூர் சம்பவம் நடந்த உடன் தவெக தலைவர் விஜய், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் ஓடி ஒளிந்தது ஏன்? என திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் ஆதவ் அர்ஜூனா பதிவிட்டதாகவும் தெரித்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் மறக்க முடியாத பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு நீங்கள் தான் காரணம் என்று தவெகவும், திமுகவும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இதேபோல் சம்பவம் நடந்த உடன் களத்தில் நிற்காமல் விஜய் உடனடியாக சென்னை சென்றதும், தவெகவின் முக்கிய நிர்வாகிகள் தலைமறைவானதும் கடும் விமர்சனத்தை உருவாக்கியது.
முதல்வரும், திமுகவும் மக்கள் பக்கம்
கரூர் கூட்ட நெரிசலுக்கு திமுகவின் திட்டமிட்ட சதியே காரணம் என்று தவெகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், திமுக எம்.பி. ஆ.ராசா இந்த சம்பவம் தொடர்பாக தவெகவிற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, ''கரூர் சம்பவம் நடந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக களத்துக்கு சென்றார். இதேபோல் அமைச்சர்களும் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார்கள். மக்களுக்கு பிரச்சனை வரும்போது முதல்வரும், திமுகவினரும் உடனடியாக களத்துக்கு சென்று மக்களுடன் நிற்கின்றனர்'' என்றார்.
விஜய் ஓடி ஒளிந்தது ஏன்?
தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மீது குற்றம்சாட்டிய ஆ.ராசா, ''இந்த சம்பவத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் சில கேள்விகள் இருக்கிறது. கரூர் சம்பவம் நடந்த உடன் தவெக முக்கிய நிர்வாகிகள் ஏன் களத்தில் நிற்கவில்லை? தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களை கூட சந்திக்காமல் வெட்கப்பட்டு கொண்டு, பயந்து கொண்டு சென்னைக்கு சென்று ஓடி ஒளிந்தது ஏன்? விஜய் பிரபலமான நபர் என்பதால் மீண்டும் கூட்டம் கூடும் என்பதால் அவர் களத்துக்கு வராததை புரிந்து கொள்ள முடிகிறது.
ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து நீக்காதது ஏன்?
ஆனால் இப்போது ட்வீட் போடும் விஜய்யுடன் கூட இருக்கும் தலைவர்கள் ஏன் களத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருக்கவில்லை? நம்மால் தான் இந்த சம்பவம் நடந்து விட்டது என்ற குற்ற உணர்ச்சியால் தான் அவர்கள் களத்துக்கு வரவில்லை என்பது தான் உண்மை'' என்று தெரிவித்தார். மேலும் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்ட ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து நீக்காதது ஏன்? என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக ட்வீட் போட்ட ஆதவ் அர்ஜூனா
''தவெகவுக்கு பணம் கொடுக்கும் முக்கியமான இடத்தில் இருக்கும் ஆதவ் அர்ஜூனா என்ற நபர் அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் வங்கதேசத்தை போல் புரட்சி ஏற்பட வேண்டும் என்று கூறி இந்திய இறையாண்மைக்கும், ஒருமைபாட்டுக்கு எதிராகவும் விஷமத்தனமான ஒரு ட்வீட் போடுகிறார். அதற்கு விமர்சனம் வந்தவுடன் அந்த ட்வீட்டை நீக்கி விடுகிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ட்வீட்டை நீக்க வைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விஷமத்தனமான ட்வீட் போட்ட ஆதவ் அர்ஜூனாவை ஏன் விஜய் கட்சியில் இருந்து நீக்கவில்லை? அவரை கண்டித்து ஏன் அறிக்கை விடவில்லை?'' என்று ஆ.ராசா கூறியுள்ளார்.
