கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். 

கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தனர்.

நிதியுதவி அறிவித்த மத்திய, மாநில அரசுகள்

மேலும் மத்திய அரசு, மாநில அரசு சார்பில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தவெக சார்பில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். 'காவல்துறை போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை. விஜய் பிரசாரத்துக்கு குறுகிய இடமே வழங்கினார்கள்' என்று தவெகவினர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சீனாவும் இரங்கல் தெரிவித்தது

அதே வேளையில் விஜய் தாமதமாக வந்ததே விபத்துக்கு காரணம். தவெவினர் காவல்துறை அதிகாரிகளின் பேச்சை மதிக்கவில்லை என்று திமுக தரப்பில் இருந்து குற்றம்சாட்டப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தமது அனுதாபத்தைத் தெரிவித்தார். "பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். மேலும் அவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுடன் எங்கள் இதயம் உள்ளது" என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறியுள்ளார்.