தொடர் மழையால் பில்லூர் அணை நிரம்பி, 16 ஆயிரம் கன அடி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்படுகிறது. மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கேரளா, நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய நீலகிரி மற்றும் கேரளா வனப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர் மட்டம் நேற்று காலை 78 அடியாக இருந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து இன்று 25 ம் தேதி காலை 86 அடியாக உயர்ந்தது..

பில்லூர் அணை கிடு கிடுவென உயர்ந்த நீர்மட்டம்

இந்நிலையில் தொடர் மழையால் அணையின் நீர் மட்டம் மீண்டும் கிடுகிடுவென உயர துவங்கி இன்று நள்ளிரவு அணை அதன் முழு கொள்ளளவான 100 அடியை நெருங்கியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அதன் நீர்மட்டத்தை 97.5 அடியாக நிலை நிறுத்தி பராமரிக்கும் விதமாக அணைக்கான தற்போதைய நீர்வரத்தான வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் உபரி நீராக பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இதனிடையே நேற்று நள்ளிரவு அணையின் நீர் வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக இருந்ததால் அந்த நீர் முழுமையாக அங்குள்ள நான்கு மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது.இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நள்ளிரவில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உட்பட அதிகாரிகள் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப் பாலத்தில் தண்ணீர் வரத்து குறித்து நேரில் ஆய்வு நடத்தி எந்நேரமும் மீட்பு பணிக்கு தயாராக இருக்குமாறு பேரிடர் மீட்பு குழுவினருக்கு அறிவுறுத்தினர்.

பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

இதனால் ஆற்றின் வேகம் அதிகரிக்க துவங்கிய நிலையில் பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதியான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்க கூடாது என அறிவுறுத்தபட்டுள்ளது. மேட்டுப்பாளையம் வருவாய்துறை, காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.