Dubai Flood : வெள்ளக்காடான பாலைவனம்; துபாயை மிரள வைத்த வீடியோ காட்சிகள்; சென்னையை மிஞ்சிய இயற்கை சீற்றம்!!
துபாயில் பெய்த வரலாறு காணாத மழையால் பாலைவனத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மிருகங்கள் அதில் தத்தளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
துபாய் என்றாலே வெயில் சுட்டெரிக்கும் என்று தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அங்கு ஒரே நாளில் கொட்டிதீர்த்த கனமழையால் தற்போது ஒட்டுமொத்த துபாயும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டிதீர்த்ததே இந்த பெரு வெள்ளத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. சாலைகள், வீடுகள், வணிக வளாகங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் நாடாகவும் துபாய் இருந்து வந்தது. இந்த பெரு வெள்ளத்தால் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகையும் முற்றிலும் தடை பட்டு உள்ளது. விமான நிலையத்திலும் வெள்ள நீர் சூழ்ந்துவிட்டதால் விமானங்களை இயக்க முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. வெளிநாடு செல்லும் பயணிகளும் விமான நிலையத்திலேயே காத்திருக்கும் நிலை உள்ளது.
இதையும் படியுங்கள்... ஆனந்த் அம்பானி துபாயில் ஷாப்பிங்! ரோல்ஸ் ராய்ஸ் காருடன் வரிசை கட்டி வந்த 20 கார்கள்!
பொதுவாக பாலைவனம் என்றாலே வறண்ட பூமியாக காட்சியளிக்கும், அங்கு தண்ணீரை பார்ப்பதே அபூர்வமாக இருக்கும். ஆனால் தற்போது பெய்துள்ள பேய் மழையால் துபாயில் உள்ள பாலைவனம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பாலைவனத்தில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால், அங்குள்ள ஒட்டகங்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்படும் அதிர்ச்சிகரமான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
துபாய் மட்டுமின்றி அதன் அண்டை நாடான பஹ்ரைன், ஓமன் உள்ளிட்ட நாடுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. துபாய் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. சென்னை பெருவெள்ளத்தை மிஞ்சும் அளவுக்கு அங்கு சூழல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள் துபாய் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்ப வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... துபாயில் பெருவெள்ளம்.. ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்ததால் அதிர்ச்சி..