மேற்கு ஆசியாவில் நடக்கும் போரால், உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாகியுள்ளது. இதைச் சமாளிக்க, இலங்கை அரசு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மேற்கு ஆசியாவில் போர் மூண்டதால் உலகம் முழுதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில், கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க, இலங்கை அரசு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி, வார வேலை நாட்கள் நான்காக குறைக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை சேனல் நியூஸ் ஏசியா வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கடுமையான கட்டுப்பாடுகள்

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போர் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், எரிபொருள் இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் நாடுகள் பெரும் சிக்கலில் உள்ளன. இலங்கைக்கு முன்பே பாகிஸ்தானும் இதே போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. 2022-ல் ஏற்பட்ட பொருளாதார சரிவிலிருந்து மீண்டு வரும் இலங்கை, நிலைமை மோசமடைவதற்குள் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை

இந்த புதிய வேலை அட்டவணை, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும். இது மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். தனியார் நிறுவனங்களும் இதைப் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இனி ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை தினமாக இருக்கும்.

இலங்கை அதிபர் சொல்வது என்ன?

அதிபர் அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடந்த அவசரக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. "நாம் மிக மோசமான சூழலைச் சந்திக்கத் தயாராக வேண்டும், ஆனால் நல்லது நடக்கும் என நம்புவோம்" என்று கூறினார். அதே சமயம், மருத்துவமனைகள், துறைமுகங்கள், அவசர சேவைகள் போன்றவை வழக்கம் போல் இயங்கும்.

பெட்ரோல், டீசல் பெற கட்டுப்பாடு

மார்ச் 15 முதல், தனியார் வாகன ஓட்டிகளுக்கு வாரம் ஒன்றுக்கு 15 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் மட்டுமே வழங்கப்படும். பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு 200 லிட்டர் வரை வழங்கப்படும். நாட்டின் தற்போதைய பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு, சுமார் ஆறு வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.

வீட்டில் இருந்து வேலைபார்க்க அறிவுறுத்தல்

இலங்கை தனது முழு எரிபொருள் தேவைக்கும் இறக்குமதியைச் சார்ந்துள்ளது. மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியைக்கூட வெளிநாடுகளில் இருந்துதான் வாங்குகிறது. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் முக்கியமாக சிங்கப்பூர், மலேசியா மற்றும் தென் கொரியாவிலிருந்தும், கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. பயணங்களையும் எரிபொருள் நுகர்வையும் கட்டுப்படுத்த, பொது நிகழ்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், அரசு ஊழியர்கள் முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.