- Home
- Tamil Nadu News
- ரெட் அலர்ட் எச்சரிக்கை! விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! 21 செ.மீ மழை! சுற்றுலாத் தலங்கள் மூடல்!
ரெட் அலர்ட் எச்சரிக்கை! விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! 21 செ.மீ மழை! சுற்றுலாத் தலங்கள் மூடல்!
தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் கனமழை பெய்து வருவதால், சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.

தென்மேற்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது. இந்நிலையில் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ம் தேதி வாக்கில் உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்
இதன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.
அவலாஞ்சியில் 21 செ.மீ மழை
இதன் காரணமாக நேற்று இரவு முதல் நீலகிரி மற்றும் கோவையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதாவது நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணிநேரத்தில் 21.5 செ.மீ மழையும், எமரால்டு, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டியில் சுற்றுலாத் தலங்கள் மூடல்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கனமழை காரணமாக பல்வேறு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது. தொட்டபெட்டா, பைரன் பாரஸ்ட், அவலாஞ்சி, சூட்டிங் பாயின்ட், படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. வேறு சுற்றுலாத் தலங்களுக்கு செல்வோர் மாலை 4 மணிக்குள் விடுதிக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3 பேர் பத்திரமாக மீட்பு
நள்ளிரவு கூடலூர் ஓவேலி அண்ணா நகர் பகுதியில் ஆற்றில் காருடன் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தர்மகிரி செல்லும் சாலையில் உள்ள ஆற்றை காரில் கடக்க முயன்றபோது கார் அடித்துச் செல்லப்பட்டது. ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் கார் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் கேரளாவை சேர்ந்த ஆண்டோதாமஸ் (53) அருண் தாமஸ் (44) இருவர் உட்பட 3 பேரை பத்திரமாக மீட்டனர்.
அடுத்த 3 மணிநேரத்தில் 7 மாவட்டங்களில் மழை
இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.