கணினிமய மூலம் மருந்து விற்கப்படுவதைக் கண்டித்து நேற்று நடந்த ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தால் நாடு முழுவதும் 8 லட்சம் மருந்துக் கடைகள் மூடப்பட்டன. இதனால், நாடு முழுவதும் ரூ.400 கோடியும் தமிழகத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான மருந்து வர்த்தகம் பாதிப்படைந்தது.  அரசு இப்பிரச்சினைக்குத் தீர்வு காணவில்லை எனில், வரும் டிசம்பர் மாதம் 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினிமய மூலம் மருந்து விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரு திட்ட வரைவு அறிக்கையைத் தயாரித்து கடந்த மாதம் 20-ம் தேதி வௌியிட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு மருந்து வியாபாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கணினிமய மூலம் வர்த்தகம் செய்யும் முடிவை கைவிடக் கோரி மருந்துக் கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்துள்ளனர். ஆனால், மத்திய அரசு இதுவரை இது தொடர்பாக எவ்வித அறிவிப்பையும் வௌியிடவில்லை.

இந்நிலையில், கணினிமய மருந்து வணிகத்தைக் கண்டித்து தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில்,  ஒருநாள் கடை யடைப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டன.

மேலும், சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதற்கு, சங்கத்தின் தலைவர் கே.மனோகரன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கே.கே.செல்வன், பொருளாளர் எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து பொது செயலாளர் கே.கே.செல்வன் கூறிய தாவது: பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், மருந்து விற்பனையை கணினிமய மூலம் மேற்கொள்ள அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவு செய்துள்ளது. மற்ற பொருட்களை போல மருந்துப் பொருட்களை கணினிமய மூலம் விற்பனை செய்ய முடியாது. கணினிமய மருந்து வணிகத்தை அனுமதித்தால் காலாவதியான  தரம் குறைவான போலி மருந்துகள்  விற்கப்படும். இது பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும்.

மருத்துவர்களின் பரிந்துரையில் மட்டுமே விற்க வேண்டிய மருந்துகள் தவறான பயன்பாட் டால் நமது சமுதாயத்தை சீரழிக்கக் கூடிய சூழ்நிலையை கணினிமய வரத்தகம் ஏற்படுத்தும். மருந்துகளின் தரம், கட்டுப்பாடுமற்றும் குளிர்பதன பெட்டிகள்மூலம் மருந்துகள் கையாளப்படுவது ஆகியவை கேள்விக் குறியாகிவிடும்.

மேலும், கணினிமய மருந்து களின் ஆதிக்கம் உருவானால் கிராமப்புறம் மற்றும் சிறிய நகரங்களில் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பது அரிதாகிவிடும். மேலும், மருந்து தொழிலை நம்பியிருக்கும் 8 லட்சம் உறுப்பினர்கள் நேரடியாகவும் 40 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் மற்றும் 1.5 கோடி குடும்ப உறுப்பினர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படும்.

கணினிமய மருந்து வணிகத்துக்கு அனுமதியளிக்க  உள்ள மத்திய அரசின் முடிவினை எதிர்த்துஅகில இந்திய அளவில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக, நாடு முழுவதும் 8 லட்சம் மருந்துக் கடைகளும் தமிழகத்தில் 35 ஆயிரம் மருந்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதன் காரணமாக, நாடு முழுவதும் ரூ.400 கோடியும், தமிழகத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான வணிகம் பாதிக்கப்பட்டது.

மத்திய அரசு இப்பிரச்சினைக்குத் தீர்வு காணவில்லை எனில், அடுத்தக்கட்டமாக வரும் டிசம்பர் மாதம் 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செல்வன் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மருந்துக் கடை உரிமையாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டன. அதேசமயம், தனியார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருந்துக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. அத்துடன், அவசர தேவைக்காக தொலைபேசி மூலம் தொடர்புகொண்டவர்களுக்கு மருந்துகள்அவர்களது வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கப்பட்டது.