அடையாளத்திற்காகவும், முகவரிக்காகவும் அண்ணாமலை ஜெயலலிதாவை பற்றி பேசுகிறார் - உதயகுமார் சாடல்
தமிழகத்தில் தனது அடையாளத்திற்காகவும், முகவரிக்காகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி பேசுவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர் பி உதயகுமார், இன்றைக்கு இருக்கக்கூடிய இந்த அரசு கையாளாகாத அரசாக மக்களுடைய வாழ்வாதார, ஜீவாதார உரிமைகளை விட்டுக் கொடுக்கின்ற ஒரு அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
புதிய அணை கட்டும் பிரச்சனை இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஆகவே முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவோம் என்ற கேரளா அரசு இன்றைக்கு தொடர்ந்து பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கக் கூடியவேலையிலே திமுக அரசு மௌனம் சாதித்துக் கொண்டிருப்பது நமது மக்களுடைய ஜீவாதாரம் பலியாகக் கூடிய ஒரு நிலையை இன்றைக்கு இந்த திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.
அணையை நம்பி மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களிலே ஏறத்தாழ 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த பாசன வசதி கூட கேரளாவினுடைய பிடிவாதத்தால் தான் சுருங்கி இருப்பதை எல்லோரும் அறிவார்கள். 1979ல் 152 அடி தேக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருந்தபோது 79க்கு முன்பாக இருந்த பாசன பரப்பெல்லாம் குறைந்து நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்ததன் காரணமாகத்தான் பாதிப்பு ஏற்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து பிரச்சனைகளை செய்து கொண்டு வருகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காண ஜெயலலிதா தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தை நடத்தி 142 அடியை உடனடியாக தேக்கி கொள்ளலாம். பேபி அணையை சீரமைத்ததற்கு பிறகு 152 அடியை தேக்கிக் கொள்ளலாம் என்கிற ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நம்முடைய வாழ்வாதாரத்தை காப்பாற்றுகிற உரிமையை பெற்றுக் கொடுத்தார்கள். ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய திமுக அரசு அதை காப்பாற்ற தவறிவிட்டது. எப்போதெல்லாம் முயற்சி எடுக்கிறோமோ அப்போது எல்லாம் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிற திமுக அரசு அதற்கு உறுதுணையாக இருக்கிறதோ உடந்தையாக இருக்கிறதோ என்கிற ஐயம்கூட நமக்கு ஏற்படுகிறது.
இதுபோன்ற உரத்த குரலிலே பிரச்சனைகளை கேரளா அரசு எழுப்புவதை நாம் வாடிக்கையாக பார்க்கிறோம். ஒவ்வொரு முறையிலும் பிரச்சனை ஏற்படுத்தி வருகிறது. 142 அடியில் இருந்து 152 அடி உயர்த்துவதற்கு குறிப்பாக இந்த தென்மேற்கு பருவமழையில் நமக்கு உபரி நீர் கேரளாவில் இருந்து கிடைக்கிற போதெல்லாம் அதில் பிரச்சனைகளை கேரளா அரசு உருவாக்கி வருகிறது. தற்போது 366 மீட்டர் தொலைவில் புதிய அணை கட்டியே தீருவோம் என்று ஜனவரி மாதமே கேரளா அரசு செய்திருப்பது உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய இந்த திமுக அரசு மௌனம் காப்பது என்பது நம்முடைய உரிமை காவு கொடுக்கின்ற சூழலை பார்க்கின்றோம்.
உச்ச நீதிமன்ற உத்தரவை காற்றிலே பறக்க விட்டு விட்டு மீண்டும் சுற்றுச்சூழல் துறை என்று சொல்லி அதற்கு ஒரு நிபுணர் குழு என்று சொல்லி மீண்டும் ஜீரோவிலிருந்து தொடங்குகிற ஒரு நிலைமை எப்படி ஏற்பட்டது? உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாக எட்டு கட்ட ஆய்வுக்கு பிறகு முல்லை பெரியாறு அணை வலிமையாக இருக்கிறது, பாதுகாப்பாக இருக்கிறது. இன்னும் பல நூறு ஆண்டுகள் இது மிகவும் பாதுகாப்பானது என்பதை தெள்ளத் தெளிவாக நிபுணர்கள் குழுவோடு தெரிவித்துள்ள்ளார்கள்.
குதிரை லாயத்திலிருந்து குதிரை வெளியேறிய பின்பு லாயத்திற்கு பூட்டு போடுவது எவ்வளவு முட்டாள்தனமான செயலோ அதேபோன்று தான் உள்ளது. ஜனவரி மாதமே அணைகட்ட கேரளா அரசு பரிந்துரை கடிதம் கொடுத்து சுற்றுச்சூழல் மையம் அதை ஏற்றுக்கொண்டு மத்திய அரசின் நிபுணர் குழு உத்தரவு பிறப்பித்த பிறகு கடிதம் எழுதுகிறார். குதிரை முல்லைப் பெரியாறு அணைக்கே ஓடிவிட்டது. இப்போது கடிதம் எழுதுவது என்று சொன்னால் இது போன்ற ஒரு செயலை மக்கள் வன்மையாக கண்டிக்கிறார்கள்.
மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கு; அரசு வழக்கறிஞர்களிடம் நீதிபதி சரமாரி கேள்வி
இது தொடர்பாக எடப்பாடி அவர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். இது போன்ற நிலையை திமுக அரசு தொடருமானால் எடப்பாடி யாரை நேரில் அழைத்து வந்து அவருடைய தலைமையில் எங்கள் ஐந்து மாவட்ட விவசாயிகளுடைய வாழ்வாதார ஜீவாதாரத்தை காப்பாற்றுவதற்கு அம்மாவின் வழியிலே எந்த அறப்போராட்டத்திற்கும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தயங்காது என்பதை நான் தெள்ளத்தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் .
ஜெயலலிதாவின் சமூக நீதிக் கொள்கை, பெண்ணுரிமை கொள்கை, மாணவ மாணவியர் சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த எல்லாவற்றையும் மூடி மறைத்து விட்டு உள்நோக்கத்தோடு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அவர்கள் சொல்வதனால் எந்த தாக்கமும் தமிழகத்தில் ஏற்படாது. எங்கள் கொள்கை கோட்பாடுகளை அவர்கள் விளக்கம் சொல்லித்தான் தமிழக அரசு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் தங்களை அடையாளப்படுத்துவதற்காகவும், தங்களுக்கு முகவரி தேடுவதற்காகவும், தேசத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஜெயலலிதாவை துணைக்கு அழைத்துக் கொள்வதில் உள்நோக்கம் இருக்கிறது. அரசியல் சூழ்ச்சி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.