மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கு; அரசு வழக்கறிஞர்களிடம் நீதிபதி சரமாரி கேள்வி
கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கு விசாரணை வரும் ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம் உத்தரவு.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி அதிகாரிகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இருந்து விடுவிக்கப்பட்ட பள்ளி ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகாவை மீண்டும் வழக்கில் சேர்க்க வேண்டும். வழக்கு தொடர்புடைய ஆவணங்கள், ஆதாரங்களை மிகவும் தெளிவான முறையில் வழங்க வேண்டும் என்று மாணவியின் தாயார் செல்வி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
விசாரணையின் போது, பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகிய மூவரும் ஆஜராகவில்லை. மாணவி தாய் செல்வி நேரில் ஆஜரானார். கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், மாணவியின் தாய் செல்வி தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், இன்று அரசு தரப்பு வழக்கறிஞர் தேவசந்திரன் பதில் விளக்கம் அளித்தார்.
முல்லை பெரியாறு புதிய அணை தொடர்பான விவாதத்திற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் - அன்புமணி
அப்போது, மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி தரப்பில் கேட்கப்பட்ட, சம்பவம் நடந்த நாளன்று பள்ளி நிர்வாகத்தினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பதிவு மற்றும் பள்ளி ஆசிரியர்கள், தாளாளர் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் பதிவு மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்டு ஓப்பன் ஆகாத 26 சிசிடிவி கேமரா பதிவுகளை முழுமையாக வழங்க வேண்டும் என்று அரசு தரப்பிற்கு நீதிபதி வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், சிசிடிவி காட்சி ஓப்பன் ஆகாதது குறித்து, அதற்கான வல்லுனர்களைக் கொண்டு, ஆய்வு செய்து அதற்கான உரிய விளக்கத்தை தாக்கல் செய்ய அரசு தரப்பிற்கு நீதிபதி உத்தரவிட்டு, இந்த மனு மீதான விசாரணையை வரும் ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டுள்ளார்.