Madurai Youth Arrested: மதுரை சமயநல்லூர் மின் வாரிய அலுவலகத்தில், பெண் ஊழியர் ஒருவரை கழிப்பறையில் சக ஊழியர் படம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில் வணிகப் பிரிவு ஆய்வாளர் ராஜராஜேஸ்வரன் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் வாரியக் கோட்ட அலுவலகத்தில் ஜூனியர் கணக்கராக பணிபுரிந்து வந்தவர் ஹேமலதா (24). இவர் வழக்கம்போல் நேற்று அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்தச் சென்றுள்ளார். அப்போது, அதே அலுவலகத்தில் வணிகப் பிரிவு ஆய்வாளராகப் பணிபுரியும் சக ஊழியரான ராஜராஜேஸ்வரன்(33) என்பவர், கழிப்பறையின் ஜன்னல் வழியாக தன்னைப் படம் எடுப்பதைப் பார்த்த ஹேமலதா அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டுள்ளார்.
பாத்ரூம் சென்ற பெண் ஊழியர்
இவரது சத்தம் கேட்டதும் அங்கிருந்து தப்பியோடிய ராஜராஜேஸ்வரன், எதுவும் நடக்காதது போல அலுவலகத்தில் தன் இருக்கையில் அமர்ந்திருந்துள்ளார். ஹேமலதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சக பெண் ஊழியர்களிடம் ஹேமலதா நடந்ததைக் கூறி அழுதுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் ஹேமலதா, மின் கோட்டச் செயற்பொறியாளர் ஜெயலெட்சுமியிடம் முறையிட்டுள்ளார்.
செல்போனில் வீடியோ
பின்னர், மின் வாரிய ஊழியர் ராஜராஜேஸ்வரனின் செல்போனை வாங்கிப் பார்த்தபோது, கோட்ட அலுவலகத்தில் பணிபுரியும் சக பெண் ஊழியர்களின் பல ஆபாசப் படங்கள் அதில் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து, ஹேமலதா கொடுத்த புகாரின் பேரில், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் மதுரை செல்லூர் அருண்தாஸ்புரத்தைச் சேர்ந்த, மின் வாரிய வணிகப் பிரிவு ஆய்வாளராகப் பணிபுரிந்த ராஜராஜேஸ்வரனை (33) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் விசாரணை
கைது செய்யப்பட்ட ராஜராஜேஸ்வரன், மற்ற பெண் ஊழியர்களையும் இதுபோல் படம் எடுத்துள்ளாரா என்பது குறித்தும், இந்தசம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
