கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த்(45). இவரது மனைவி புவனேஸ்வரி(40). சங்கரா கண் மருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். பிரசாந்த் சொந்தமாக இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். பிரசாந்த், புவனேஸ்வரி உட்பட 8 பேர் நடைபயிற்சிக்காக பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதிக்கு செல்ல முடிவெடுத்தனர். இதற்காக ஒரு காரில் நேற்று காலையில் அப்பகுதிக்கு சென்றனர். காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அனைவரும் வனப்பகுதிக்குள் நடந்து சென்றனர்.

பாலமலை அருகே இருக்கும் பசுமலை என்கிற இடத்தில் அவர்கள் சென்ற போது காட்டு யானை ஒன்று வந்துள்ளது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அனைவரும் அங்கிருந்து ஓட தொடங்கினர். ஆக்ரோஷமான காட்டு யானையும் அவர்களை துரத்த தொடங்கியது. புவனேஸ்வரியால் வேகமாக ஓட முடியவில்லை. அவரை காட்டுயானை தன் தும்பிக்கையால் சுற்றிவளைத்து தூக்கி வீசியது. இதில் கீழே விழுந்த அவர் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து காட்டுயானை புவனேஸ்வரியை காலால் ஓங்கி மிதித்தது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தன் கண் முன்னே மனைவி காட்டு யானை தாக்கி பலியாகியதை கண்டு பிரசாந்த் கதறி துடித்தார். யானை மிதித்ததில் புவனேஸ்வரியின் உடல் சிதைந்து போயிருந்தது. அங்கிருந்தவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். தகவலறிந்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் சுரேஷ் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். புவனேஸ்வரியின் உடலை மீட்ட அவர்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக புவனேஸ்வரியின் கணவர் பிரசாந்த் உட்பட 7 பேரிடம் நடைபயிற்சிக்காகத்தான் வனப்பகுதிக்குள் சென்றார்களா? என விசாரணை நடைபெற்று வருகிறது. பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதிக்குள் காட்டுயானைகள் அதிகளவில் உலவுவதால் பொதுமக்களுக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும் அத்துமீறி சிலர் வனப்பகுதிக்குள் செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. அவ்வாறு சென்றதில் தான் புவனேஸ்வரி காட்டு யானை தாக்கி தற்போது உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read: அதிகாலையில் கோர விபத்து..! கார்-அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதிய ஆம்னி பஸ்..! 4 பேர் உடல் நசுங்கி பலி..!