கோவையில் உலக் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்: உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சி!
கோவையில் உலக் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்ற முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பாக தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதில், ஏராளமான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில், கோவையில் உலக் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் இந்த வாக்குறுதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
முன்னதாக, செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது கோவை மாவட்டத்துக்கான முழுப் பொறுப்பையும் திமுக தலைமை அவரிடமே கொடுத்திருந்தது. இப்போது அவர் சிறையில் இருப்பதால் கோவை தொகுதியின் பொறுப்பு தொழில் துறை அமைச்சரும், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான டிஆர்பி ராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, கோவையில் திமுகவின் வெற்றியை உறுதி செய்வதற்காக அமைச்சர் டிஆர்பி ராஜா கோவையில் முகாமிட்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், “கோயம்புத்தூர் முழுவதும் கடந்த சில நாட்களாக நாங்கள் பிரச்சாரம் செய்தபோது, விளையாட்டுகளில் ஆழ்ந்த ஆர்வமுள்ள பல இளைஞர்களை சந்தித்தோம். தடகளம், துப்பாக்கி சுடுதல், கார் பந்தயம், கால்பந்து, ஸ்கேட்டிங், குதிரையேற்றம் போன்ற பல்வேறு விளையாட்டுகளில் இளைஞர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டில் கோவையின் ஆர்வம் ஈடு இணையற்றது. 3 TNPL அணிகளின் உரிமையாளர்களின் தாயகமாகவும் கோவை உள்ளது. மேலும் வளர்ந்து வரும் தேசிய கிரிக்கெட் நட்சத்திரங்களில் பலர் தமிழ்நாட்டின் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அதனால், கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழ்நாடு முழுமைக்கும் விளையாட்டு உட்கட்டமைப்பில் ஒரு பெரிய ஊக்கம் தேவை. இதனை நமது இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிட்ஜி ஸ்டாலின் கடந்த ஒரு வருடமாக உருவாகி வருகின்றார். கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அற்புதமான திறமைகள் மற்றும் தமிழகத்தில் மற்றொரு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தின் உண்மையான தேவையைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் ஒரு புத்தம் புதிய உலகத்தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தை கோவையில் கட்டித் தரவேண்டும்.” என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கையை டி.ஆர்.பி.ராஜா விடுத்த அடுத்த சில நிமிடங்களிலேயே முதல்வர் ஸ்ராலின் அதற்கு ஓகே சொல்லி விட்டார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில், நாடாளுமன்ற தேர்தல் 2024க்கான திமுக தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியாக இதை சேர்க்க விரும்புகிறேன்.
ஸ்டாலினும், உதயநிதியும் ஊழல், கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர்: ஜே.பி.நட்டா சாடல்!
விளையாட்டு ஆர்வலர்களின் கோரிக்கையை மனதில் வைத்து, கோவையில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க முயற்சி எடுப்போம். தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், சென்னையின் சின்னமான சேப்பாக்கம் மைதானத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது சர்வதேச தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானமாக கோவை கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கும் என்ற வாக்குறுதியை அளிக்கிறேன். நமது அரசும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயஸ்டாலினும் தமிழகத்தில் திறமைகளை வளர்ப்பதற்கும், விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ளனர்.” என பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், கோவையில் உலக் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்ற முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நமது மாநிலத்தில் மற்றொரு சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் நீண்ட நாள் கனவை திமுக தேர்தல் அறிக்கையில் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் சேர்த்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
கோயம்புத்தூரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதாக உறுதியளித்த தமிழக முதல்வருக்கு தமிழகத்தின், குறிப்பாக கோவையின் கிரிக்கெட் ரசிகர்களுடன் இணைந்து எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தொலைநோக்குப் பார்வையுடன் சர்வதேச தரத்திலான திறமைகளை வளர்ப்பது மற்றும் உலகின் சிறந்த விளையாட்டு நாடுகளுக்கு இணையாக விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது. முதலமைச்சரின் உறுதிமொழி விரைவில் நிறைவேற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.” என தெரிவித்துள்ளார்.