பொள்ளாச்சி அருகே இரண்டு சிறுமிகளும் ஒரு சிறுவனும் நான்கு மைனர் சிறுவர்கள் மற்றும் 18 வயது இளைஞர் ஒருவரால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது. குற்றவாளிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர், ஒருவர் தலைமறைவாகிவிட்டார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, இரண்டு சிறுமிகளும் ஒரு சிறுவனும் கடந்த சில மாதங்களாக நான்கு மைனர் சிறுவர்கள் மற்றும் 18 வயது இளைஞர் ஒருவரால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
குழந்தைகள் உதவி மையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பின் பேரில், வெள்ளிக்கிழமை குற்றவாளிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். மைனர் சிறுவர்களில் ஒருவர் தலைமறைவாகிவிட்டார், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள நான்கு சிறுவர்களும் 18 வயது இளைஞரும் முதலில் குழந்தைகளுடன் நட்பு கொண்டு, தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு தனியான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர். தங்கள் விருப்பப்படி நடக்க மறுத்தால் அவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை பாதிக்கப்பட்ட சிறுவன் தனது உறவினரிடம் இது குறித்து கூறியிருக்கிறார். அதற்குப் பிறகுதான், மூன்று குழந்தைகளின் பெற்றோருக்கும் இந்தப் பாலியல் வன்கொடுமை பற்றித் தெரியவந்தது. இருப்பினும், பெற்றோர்கள் போலீசில் புகார் அளிக்கத் தயாராக இல்லை.
சில கிராமவாசிகள் தான் 1098 என்ற குழந்தைகளுக்கான உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் நான்கு மைனர் சிறுவர்கள் மற்றும் ஒரு இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை மாலை காவல்துறையினரால் மூன்று மைனர் சிறுவர்கள் மற்றும் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டனர். அந்த இளைஞர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று மைனர் சிறுவர்களும் கோவை நகரில் உள்ள சிறார்களுக்கான கண்காணிப்பு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் உள்ளூர் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கவலை எழுந்துள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
(பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி, பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் வெளியிடப்படவில்லை)
