பைக் வாங்கி இரண்டு மாதத்தில் ஆறு முறை சர்வீஸ்; கடுப்பாகி பைக்கை கடையிலேயே விட்டு சென்ற வாடிக்கையாளர்
கோவையில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட புதிய பைக் மீ்ண்டும் மீண்டும் பழுதானதால் எரிச்சலடைந்த வாடிக்கையாளர் புதிய பைக்கை கடைக்காரரிடமே திரும்ப ஒப்படைத்துச் சென்றார்.
கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர் சாகீர். இவரது மகன் இப்ரான் (வயது 27). துணி வியாபாரம் செய்து வருகிறார். தனது மகன் இப்ரானுக்கு பிடித்த ரூ.1.98 லட்சம் மதிப்புள்ள Hero X Pluse பைக்கை கோவை அவிநாசி சாலை வ.உ.சி பூங்கா அருகே உள்ள சுகுணா ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஆசை ஆசையாய் கடந்த செப்டமர் மாதம் வாங்கி கொடுத்துள்ளார்.
பைக் வாங்கி இரண்டரை மாதங்கள் ஆகிய நிலையில் பைக் இன்ஜினில் ஆயில் கசிவு ஏற்பட்டு உள்ளது. பைக் எடுத்து தற்போது வரை வெறும் 1100 கிலோ மீட்டர் மட்டுமே ஓட்டப்பட்டுள்ளது. இதனை பலமுறை நிறுவனத்திடம் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று வாடிக்கையாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பைக் எடுத்து ஆறு முறை ஆயில் கசிந்து கொண்டே இருப்பதாக ஆறு முறையும் சர்வீஸ் செய்துள்ளனர். ஒவ்வொரு 200 கிலோமீட்டர் ஓட்டும் போதும் பைக்கில் இருந்து ஆயில் கசிந்து கொண்டு இருக்கிறது என வாடிக்கையாளர் கூறினார்.
அதேபோல Hero X Pluse பைக் எடுக்கும் பொழுது 45 கிலோமீட்டர் மைலேஜ் கொடுப்பதாக கூறியிருந்த நிலையில் தற்போது வெறும் 20 முதல் 22 கிலோமீட்டர் வரை மைலேஜ் வருவதாக வாடிக்கையாளர் வேதனையும் தெரிவித்தார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்ததால் தனது மகன் பைக்கை தீயிட்டு கொளுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதால் பைக்கை வாங்கிய நிறுவனத்திடம் ஒப்படைத்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இது குறித்து மோட்டார் நிர்வாகத்திடமும் மற்றும் ஹீரோ தலைமை அலுவலகத்திற்கு புகார் அளித்தும் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மன உளைச்சலுக்கு வாடிக்கையாளர் ஆளாகி இருக்கின்றார். தனது மகனுக்கு ஆசை ஆசையாய் வாங்கிய பைக்கில் பிரச்சனை ஏற்பட்டு அதற்கு தீர்வு கிடைக்காததால் மனம் நொந்து போன சாகீர் தனக்கு பைக் வேண்டாம் என்று பைக் வாங்கிய நிறுவனத்தில் வாகனத்தை விட்டு விட்டுச் சென்று விட்டார். சுகுணா ஹீரோ நிறுவனத்தில் சர்வீஸ் மேலாளர் செந்தில் குமார் வாடிக்கையாளரிடம் கெஞ்சியும் அதனை மறுத்துவிட்டு பைக் வேண்டாம் என்று கூறி அங்கிருந்து சென்றார்.