மருத்துவத்துறையில் பிற மாநிலங்களை விட தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது - பிடிஆர் பழனிவேல் ராஜன்!
கர்ப்பிணிகள் நலனில் அக்கறை செலுத்தாவிட்டால் அது ஒட்டுமொத்தமாக அது வருங்காலத்தை சிதைத்து விடும் என தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார்.
கோவையில் ஆசியா ஓசியானியா ஆராய்ச்சி மையம் மற்றும் பிறப்புறுப்பு நோய் தொற்று மற்றும் தசை வளர்ச்சி அமைப்பின் 11வது தேசிய மாநாடு நடைபெற்றது. அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில், கர்ப்பப்பை புற்றுநோய் இந்த மாநாட்டில் முக்கிய கருப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பழனிவேல் ராஜன், குழந்தைகள் இன்றி எந்த வருங்காலமும் இருக்க முடியாது எனவும், கர்ப்பிணிகள் நலனில் அக்கறை கொள்ளாமல் தவிர்த்தால் அது நமது வருங்காலத்தையே சிதைத்து விடும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் தற்போதைய முக்கிய பிரச்சினை நிதி ஆதாரமோ, நிதி பெருக்குவதோ அல்ல எனவும் ஒதுக்கப்படும் நிதியை நலத்திட்டங்கள் வாயிலாக மக்களிடம் முறையாக கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்புகள் தான் எனவும் தெரிவித்தார்.
கொரோனா நோய்க்காலம், நமக்கு பல்வேறு படிப்பினைகளை வழங்கியிருப்பதாக தெரிவித்த அவர், மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக இருப்பதாலேயே அதனை கடந்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆயிரம் பேருக்கு 4 மருத்துவர்கள் என்கிற அளவில் இருப்பதன் மூலம், தமிழகம் பிற மாநிலங்களை விட முன்னோடி மாநிலமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.