பாஜக.வுக்கு ஆதரவான நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கவே நீட் கொண்டுவரப்பட்டது - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
நீட்டை கொண்டு வந்ததே பணத்தை சம்பாதிப்பதற்கும், முறைகேடு செய்வதற்கும் தான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை குற்றம் சாட்டி உள்ளார்.
கோவையில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இது ஒரு மகிழ்ச்சியான தருணம். முதலமைச்சரின் உழைப்புக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய அங்கீகாரம். மூன்று ஆண்டு ஆட்சிக்கு சான்றிதழாக மக்கள் 40/40 வெற்றியை தந்திருக்கிறார்கள்.
மேலும் ஒருபோதும் தமிழ் மண்ணில் பாசிசமும், பாஜகவும் காலூன்ற முடியாது என கோவை வந்த ராகுல்காந்தி கூறியதாக சுட்டிக்காட்டியதுடன், அதன் அடிப்படையில் 40க்கு 40 வெற்றியை பெற்று இருக்கிறோம். இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவில் கலந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த செல்வ பெருந்தகை, இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு காரணம் முழுக்க முழுக்க மக்கள் பலமும், மூன்று ஆண்டு ஆட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் குறிப்பிட்டார்.
திமுக கூட்டணியில் உரிய மரியாதை அளிக்கப்படுகிறது. தாங்களெல்லாம் தோழமையாக இருக்கிறோம். உண்மையாக இருக்கிறோம், கால் நூற்றாண்டுக்கு மேல் தமிழ்நாட்டில் நல்லாட்சியை கொடுப்போம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், நீட் தேர்வை பாஜக அரசு திட்டமிட்டு ஏழை எளிய மாணவர்கள், கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக நடத்தி வருகிறது.
இதில் ஆள் மாறாட்டம் இருக்கிறது. பணபலம் இருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டுக்கு நீட் வேண்டாம். தமிழ் குழந்தைகளை தொடர்ந்து மரணத்திற்கு ஆளாக்க வேண்டாம் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதேபோல் நீட் தேர்வில் தொடர்ந்து முறைகேடு தான் நடக்கிறது. நீட்டை கொண்டு வந்ததே பணத்தை சம்பாதிப்பதற்கும், முறைகேடு செய்வதற்கும் தான் என்றும் குற்றம் சாட்டியதுடன், பாஜகவின் ஆளுங்கட்சி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கத்தான் இந்த நீட் எனவும் விமர்சித்தார்.