கோவை அரசு மருத்துவமனையில் வீல் சேர் இல்லாததால் 84 வயது முதியவரை அவரது மகன் இழுத்து சென்ற அவலம் நடந்துள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மருத்துவ கட்டமைப்புகள் வலுவாக உள்ளது. தமிழக அரசு தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் வீல் சேர் இல்லாததால் நோயுற்ற முதியவரை அவரது மகனே இழுத்து சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தினமும் ஏராளமான மக்கள் வருகை புரிகின்றனர்.

வீல் சேர் கொடுக்கவில்லை

உள்நோயாளிகளாவும், வெளிநோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கோவையை சேர்ந்த காளிதாஸ் என்பவர் நோயுற்ற 84 வயதான தனது தந்தையை சிசிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது காளிதாஸ் தந்தையை அழைத்து செல்ல வீல் சேர் கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் வீல் சேர் கொடுக்கவில்லை என்றும் வீல் சேர் வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டும் என கூறியதாகவும் கூறப்படுகிறது.

தந்தையை மகன் இழுத்து சென்ற அவலம்

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தும் வீல் சேர் வழங்கப்படாததால் விரக்தி அடைந்த காளிதாஸ் தனது தந்தையை கைத்தாங்கலாக இழுத்து சென்று ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை ஊழியர்கள் 2 பேர் 5 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையின் டீன் விளக்கம்

அரசு மருத்துவமனையில் வீல் சேருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதும், அதற்கு ஊழியர்கள் பணம் கேட்டதும் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கோவை அரசு மருத்துவமனையில் வீல் சேர், ஸ்டெர்ச்சர் தட்டுப்பாடு இல்லை. கொஞ்ச நேரம் காத்திருக்காமல் அந்த நோயாளியை இப்படி அவரது மகன் அழைத்து சென்றுள்ளார் என அந்த மருத்துவமனையின் டீன் விளக்கம் அளித்தார். இந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதான் உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பா?

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நயினார் நாகேந்திரன், ''கோவை அரசுப் பொது மருத்துவமனையில் 2 மணி நேரம் காத்திருந்தும் சக்கர நாற்காலி வழங்கப்படாததால், நோயுற்ற தந்தையை அவரது மகன் இழுத்துச் சென்ற காணொளி மனதைப் பதைபதைக்க வைக்கிறது.

மலைப்பகுதிகளில் சாலை வசதியின்றி நோயாளிகளைத் தூளி கட்டித் தூக்கிச் செல்வதில் தொடங்கி, பல்நோக்கு மருத்துவமனையில் நோயாளிகளை இழுத்துச் செல்வது வரை மருத்துவத்திற்காக மக்களை அலைக்கழிப்பது தான் "உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பா" முதல்வர் ஸ்டாலின் அவர்களே? ஆட்சி முடியும் தருவாயிலாவது, ஆரவார வெற்று விளம்பரத்தை விடுத்து, அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்துங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.