Coimbatore News: கோவை கொடிசியா அருகே உள்ள லூலு மால் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் வாகனத்தின் ஹெல்மெட்டுக்குள் 4 அடி நீள நல்ல பாம்பு புகுந்தது. தகவலின் பேரில் வந்த பாம்பு பிடி வீரர் பாம்பை பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார்.
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். இந்நிலையில் மழைக்காலம் வந்துவிட்டாலே பாம்புகள் தொல்லைகள் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் பொந்துகள், புதர்களில் இருந்து வெளிவரும் பாம்புகள் வீடுகளுக்குள், வாகனங்கள் மற்றும் ஷூவுக்குள் புகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கோவை கொடிசியா அருகே உள்ள லூலு மால் வேர்ஹவுஸில் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் வாகனத்தில் மாட்டி வைத்திருந்த ஹெல்மெட்டுக்குள் 4 அடி நல்ல பாம்பு புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கொடிசியா அருகே உள்ள லூலு மால் waer house பார்க்கிங்கில் புல்லட் வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தில் பக்கவாட்டில் ஹெல்மெட் தொங்கவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த பகுதியில் வந்து நல்ல பாம்பு அந்த ஹெல்மெட்டுக்குள் புகுந்துள்ளது. இருசக்கர வாகன உரிமையாளர் சங்கர் திடீரென்று பார்த்த பொழுது உள்ளே பாம்பு இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுதொடர்பாக பாம்பு பிடிக்கும் வீரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்து அவர் லாபகமாக அந்த 4 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவையில் காலை, வேளையில் மிகவும் குளிராக இருப்பதால் மிதமான வெப்பத்தை தேடி இது போன்ற பாம்புகள் வருகிறது என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆகவே ஷூ, ஹெல்மெட், வெளியில் வைக்கப்பட்டுள்ள பொருள்களை எடுக்கும்போது மிகுந்த கவனமாக கையாள வேண்டும் என்று வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


