கொட்டும் மழையில் காத்திருக்கும் கோவைவாசிகள்... கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம்...!
கோவையில் கொட்டும் மழையிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
கொரோனா 2வது அலை தீவிரமாக இருந்த போது தமிழகத்திலேயே கோவை மாவட்டம் தான் தொற்று எண்ணிக்கையில் முதலிடம் வகித்தது. தினந்தோறும் 5 ஆயிரம் பேர் அளவிற்கு கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பதிவாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. எனவே பிற மாநிலங்களைக் காட்டிலும் கோவையில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தொற்று கணிசமான அளவிற்கு கொண்டு வரப்பட்டது.
இதையும் படிங்க: அரசியலுக்கு முழுக்கு போட்ட கையோடு அடுத்த அதிரடி... நாளை மேற்கு வங்கம் புறப்படும் ரஜினிகாந்த்...!
நேற்றைய நிலவரப்படி கோவையில் 291 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வரும் போதும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்ற கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கொரோனா 3வது அலை மற்றும் கோவையில் 2வது அலை நடத்திய கோரதாண்டவத்தின் விளைவாக மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள தடுப்பூசி மட்டுமே சரியான ஆயுதம் என்பதை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து மக்கள் தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் விளைவாக தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டது. குறிப்பாக கோவையில் கடந்த ஒரு வாரத்தில் சில சமயங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே தடுப்பூசி செலுத்தப்படும் நாட்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.
இதையும் படிங்க:சீக்கிரம் முடிங்க... அதேநேரத்தில் அதிக கவனமா இருங்க... அமைச்சர் எ.வ.வேலுவிற்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்!
தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான டோக்கன்களை பெறுவதற்காக நள்ளிரவு முதலே சுகாதார நிலையங்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி மையங்கள் முன்பு காத்திருக்க ஆரம்பித்துள்ளனர். இன்று அதிகாலை முதலே இராமநாதபுரம், உக்கடம், நஞ்சுண்டாபுரம், புலியகுளம், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட கோவையின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் மழையை பொருட்படுத்தாது, கையில் குடையுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் இதுவரை 9.72 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், 25 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.