அரசியலுக்கு முழுக்கு போட்ட கையோடு அடுத்த அதிரடி... நாளை மேற்கு வங்கம் புறப்படும் ரஜினிகாந்த்...!
இனி அரசியலி ஈடுபடும் எண்ணமில்லை என ரஜினி கூறியதால் அதிர்ச்சியில் உள்ள ரஜினி ரசிகர்கள் அதிலிருந்து மீள்வதற்குள் சூப்பர் ஸ்டார் பற்றிய அடுத்த அப்டேட் கசிந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர மாதம் தன்னுடைய அரசியல் அறிவிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவேன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்ற ஹேஷ்டாக்குடன் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு’ என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
அதேபோல் அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூண மூர்த்தி நியமிக்கப்பட்டனர். கட்சி பணிகளுக்கு முன்னதாக அண்ணாத்த பட ஷூட்டிங்கை முடித்துக் கொடுப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷூட்டிங்கிற்கு கிளம்பினார்.
ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெற படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது படக்குழுவை சேர்ந்த சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் ரஜினிகாந்திற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்றே வந்த போதும், ரத்த அழுத்தமாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
2020ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் 27ம் தேதி டிஸ்சார்ஜ் ஆனார். அப்போது கொரோனா தொற்று ஏற்படுவது போன்ற சூழ்நிலைகளை தவிர்க்கவும், ஒய்வு எடுக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து டிசம்பர் 29ம் தேதி 3 பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்ட ரஜினி, “ என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என வருத்தப்பட்டார்.
அதன் பின்னர் பல மாதங்கள் ஓய்வில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் அண்ணாத்த பட ஷூட்டிங்கில் பங்கேற்றார். ஷூட்டிங் முடிந்த கையோடு வழக்கமான உடல பரிசோதனைக்காக கடந்த மாதம் 19ம் தேதி தனி விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு பரிசோதனைகளை முடித்துக்கொண்டு சில நாட்கள் ஓய்வெடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 9ம் தேதி சென்னை திரும்பினார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து ‘மீண்டும் அரசியலில் ரஜினி’ என்ற பேச்சுக்களும் எழுந்தது.
இன்று காலை சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், தன்னுடைய மக்கள் மன்றத்தை கலைப்பதாகவும், இனி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அதிர்ச்சியில் இருந்து ரஜினி ரசிகர்கள் மீள்வதற்குள் சூப்பர் ஸ்டார் பற்றிய அடுத்த அப்டேட் கசிந்துள்ளது. அதாவது அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினி நாளை மேற்கு வங்கத்திற்கு புறப்பட உள்ளாராம். அங்கு 4 நாட்கள் நடைபெற உள்ள படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.