கோவை மக்கள் என் மனதை வென்றுவிட்டார்கள்!: கோவை கூட்டத்தைப் பார்த்து பிரதமர் மோடி உற்சாகம்
கோவை ரோடு ஷோ குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, கோவை மக்கள் என் மனதை வென்றுவிட்டார்கள் என்றும் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று மாலை நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, கோவை மக்கள் என் மனதை வென்றுவிட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார். வட மாநிலங்களில் புகழ்பெற்ற ரோடு ஷோ தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவையில் தான் நடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் இருந்து விமானம் மூலம் மாலை 5 மணியளவில் கோவை வந்த பிரதமர் மோடி மோடி விமான நிலையத்தில் இருந்து 2.5 கி.மீ. தூரம் சாலை மார்க்கமாக ஊர்வலமாகச் சென்றார். இந்த ரோடு ஷோவில் திரளமான பாஜக தொண்டர்கள் மற்று் பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று வரவேற்பு அளித்தனர்.
சாலையோரங்களில் ஆங்காங்கே பாஜகவினர் ஆடல் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடத்தியும் மலர் தூவியும் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். உற்சாக வரவேற்பை ஏற்று பிரதமர் மோடியும் கூட்டத்தினரை நோக்கி கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சுமார் ஒரு மணிநேரம் நீட்டித்த இந்த ரோடு ஷோ குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். "கோவை மக்கள் என் மனதை வென்றுவிட்டார்கள்! இன்று மாலை நடந்த ரோட்ஷோ பல ஆண்டுகள் நினைவில் நிற்கும். இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டது சிறப்பு. இந்த வாழ்த்துக்கள் பெரிதும் போற்றப்படத்தக்கவை" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை" என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். கோவை ரோடுஷோவில் கலந்துகொண்ட கூட்டத்தின் படங்கள் சிலவற்றையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
பிரதமரின் வாகனப் பேரணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோரும் பிரதமருடன் பங்கேற்றிருந்தனர். பேரணிக்கு முன்பாக 1998 கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட மோடி, "1998 ல் நிகழ்ந்த கோயம்புத்தூர் தீவிரவாத குண்டுவெடிப்புகளை மறக்க முடியாது. இன்று இந்த நகரத்திற்கு வந்திருக்கும் போது, அந்த குண்டுவெடிப்புகளில் நம்மை விட்டுப் பிரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன்" எனக் கூறியுள்ளார்.
கோவையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இன்று இரவு தங்கும் பிரதமர் மோடி, நாளை காலை கேரளா செல்கிறார். பின், மீண்டும் தமிழ்நாடு திரும்பும் அவர் சேலத்தில் பிற்பகல் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசவுள்ளார். இந்தக் கூட்டத்தில் பாஜகவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள அனைத்து கட்சியின் தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றுவார்கள் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.