கோவை கார் வெடிப்பு வழக்கு... கைதானவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை!!
கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் 2வது நாளாக நகரின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் அழைத்து சென்று வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் 2வது நாளாக நகரின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் அழைத்து சென்று வாக்குமூலம் பெற்றுள்ளனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த அக்.23 ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஜமீசா முபின் என்பவர் உயிரிழந்தார். இது தீவிரவாத தாக்குதல் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்பொழுது இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருவதால் கடந்த 21 ஆம் தேதி பெரோஸ் கான், உமர் பாரூக், முஹம்மது அசாருதீன், அப்சர் கான் மற்றும் பெரோஸ் ஆகிய ஐந்து பேரை மட்டும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 5 பேரிடமும் ஒன்பது நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் கொரோனா நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்... அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தல்!!
மூன்று நாட்களாக சென்னையில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நேற்று முதல் கோவையில் விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது. நேற்று உக்கடம் புல்லுக்காடு, அல் அமீன் காலனி, ஜி.எம்.நகர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று உக்கடம் அன்பு நகர் பகுதிக்கு 5 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இலங்கை தேவாலயம் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முகமது அசாரூதின் என்பவரது வீட்டின் அருகில் இந்த 5 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இந்த 5 பேரில் உயிரிழந்த ஜமீஷா முபின் என்பவரின் உறவினரான முகமது அசாருதீன் என்பவரை மட்டும், புரூக்பீல்ட் மால் பார்க்கிங் பகுதிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: ஜன.9 முதல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்... அறிவித்தார் சபாநாயகர் அப்பாவு!!
மற்ற நான்கு பேரையும் வேறு பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மாலின் பார்க்கிங் பகுதியில் உள்ள கார் பழுது நீக்கும் நிறுவனத்தில் முகமது அசாரூதீன் பணிபுரிந்து வந்த நிலையில், முகமது அசாருதீன் குறித்து அங்கிருந்த நபர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 5 பேரையும் தனித்தனியாகவும், ஒரு சில இடங்களுக்கு மொத்தமாகவும் அழைத்து சென்று எந்தெந்த இடங்களில் நின்று பேசினார்கள், யாரிடம் பேசினார்கள் என்பது குறித்தும் விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது. ஐந்து பேரும் கொடுக்கும் வாக்குமூலங்கள் அனைத்தும் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.