தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்படும் கனிம வளங்கள்; கோவையில் 6 லாரிகள் பறிமுதல்
கேரளாவுக்கு ஜல்லிக் கற்களைக் கடத்தி செல்ல முயன்ற 6 லாரிகளை கோவை வாளையார் சோதனை சாவடி அருகே கனிம வளத்துறை தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கேரளா மாநிலத்தில் பாறைகளை தகர்ப்பதற்கும், கனமங்களை எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்டை மாநிலமான தமிழகத்தில் இருந்து தான் பெரும்பாலான கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்திச் செல்லப்படுகின்றன. அந்த வகையில் கேரளாவுக்கு சட்டவிரோதமாக கனிமங்கள் லாரிகளில் கடத்திச் செல்லப்பபடுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், கனிம வளத்துறை உதவி புவியியலாளர் அஸ்வினி தலைமையிலான தனிப்படை அதிகாரிகள் வாளையார் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியில் ஜல்லிக் கற்களுடன் வந்தவர் அதிகாரிகள் நிற்பதை பார்த்து சாலையிலே லாரியை நிறுத்தி விட்டு தப்பி சென்றார்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் லாரியை சோதனையிட்ட போது உரிய அனுமதி இன்றி ஜல்லி கற்களை கேரளாவிற்கு எடுத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதே போல் உரிய அனுமதியின்றி ஜல்லி கற்களை எடுத்து வந்த 6 லாரிகளை தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் உதவி புவியியலாளர் அஸ்வினி அளித்த புகாரியின் அடிப்படையில் லாரி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.