தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சிலர் சுற்றுலாவிற்காக கடந்த 6ம் தேதி தமிழகம் வந்தனர். தமிழகத்தின் பல இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்த அவர்கள் கடந்த வாரம் சனிக்கிழமை ஈரோடு வந்துள்ளனர். இந்த நிலையில் ஏழு பேர் கொண்ட குழுவில் இருந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் இருந்ததால் மீண்டும் தாய்லாந்துக்கு செல்ல திட்டமிட்ட அந்நபர் சனிக்கிழமை இரவு கோவை விமான நிலையம் வந்தார்.

விமான நிலையத்தில் மருத்துவ குழுவினர் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். சளி, இருமல் போன்றவை இருந்ததால் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கொரோனா வார்டில் அவருக்கு தனிமை சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

7 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி..! அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்..!

ஆய்வின் முடிவில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. இதனிடையே கோவை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர் இன்று காலை உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு சிறுநீரக செயலிழப்பே காரணம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து சுற்றுலா வந்த ஒருவரின் மரணம் கோவை பகுதியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் கொரோனாவிற்கு அடுத்த பலி..! மஹாராஷ்டிராவில் ஒருவர் உயிரிழந்தார்..!