வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை சிறுத்தை தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுத்தை, காட்டு யானை அட்டசாகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் வனவிலங்குகள் புகுந்து மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில் கோவையில் வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் சிறுமியை சிறுத்தை இழுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேயிலை தோட்டம்
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசு உட்பட தனியாருக்கு சொந்தமான 54 எஸ்டேட்டுகள் உள்ளன. இங்கு தேயிலை பறிக்கும் தொழிலில் பீகார், ஒரிசா, அசாம் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் 35,000க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் எஸ்டேட்டுக்கு சொந்தமான குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
சிறுமியை இழுத்து சென்ற சிறுத்தை
இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சைமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண்முன்னே 4 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காளியம்மன் கோவில் அருகே உள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ்முந்தா மற்றும் மோனிகா தேவி தம்பதியின் மகள் ரோசினியை, தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து தூக்கிச் சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் தாயின் கண்ணெதிரே தூக்கி சென்ற பார்த்து அலறி கூச்சலிட்டுள்ளார்.
ட்ரோன் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தேடும்
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஓடி வந்து, குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீசார் மற்றும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிறுமியின் உடை மட்டுமே கிடைத்த நிலையில் குழுக்களாக பிரிந்து தீவிர தேடுதல் வேட்டை ஈடுபட்டுள்ளனர். மேலும் ட்ரோன் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் சிறுமியின் உடலை வனத்துறையினர் மீட்டனர். குழந்தையை சிறுத்தை தூக்கிச் சென்ற கடித்து குதறிய சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
