தொண்டர்கள் மீது காவல் துறை தடியடி: ஊட்டியில் பாஜக போராட்டம்!
ஊட்டியில் பாஜக தொண்டர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதையடுத்து, பாஜகவினர் போராட்டம் நடத்தினர்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுத்தாக்கல் கடைசி நாள் வருகிற 27ஆம் தேதியாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் வருகிற 30ஆம் தேதியாகும்.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை மறுநாள் கடைசி நாள் என்பதால், திமுக, அதிமுக, பாஜக கட்சியை சார்ந்த, அக்கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்கள் ஏராளமானோர் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
தேர்தல் பத்திரங்கள்: ரூ.613 கோடி எங்கே? திமுக கேள்வி!
அந்த வகையில், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன், பாஜக தொண்டர்களோடு ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த நேரத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத காவல்துறை தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, காவல்துறையை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடியடியால் காயமுற்ற பாஜக தொண்டர்களுக்கு ஆறுதல் கூறி பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஊட்டி எஸ்.பி பணியிடை நீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஊட்டி எஸ்.பி அண்ணாமலையிடம் பேசி வருத்தம் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக, போராட்டத்தை கைவிட்டு பாஜகவினர் அங்கிருந்து களைந்து சென்றனர்.