போட்டிப்போட்டு சத்துமாத்திரையை உட்கொண்ட 4 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை
ஊட்டி அருகே போட்டி போட்டு அதிக அளவில் ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு மயங்கி விழுந்த 4 மாணவிகளுக்கு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி அருகிலுள்ள காந்தள் பகுதியில் ஊட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 200க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர். தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள் இப்பள்ளியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளியில் வழங்கப்பட்ட சத்து மாத்திரைகளை யார் அதிக அளவில் விழுங்குவது என்று 8-ம் வகுப்பு மாணவிகளிடையே போட்டி ஏற்பட்டிருக்கிறது.
இதில், 4 மாணவிகள் அதிக எண்ணிக்கையில் மாத்திரைகளை விழுங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், நான்கு மாணவிகளும் மயக்கமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து ஊட்டி ஜி-1 காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து தெரிவித்த சுகாதாரத்துறை அதிகாரிகள், “பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்குப் பிறகு வாரம் ஒரு முறை ஊட்டச்சத்து மாத்திரைகளை வழங்க வேண்டும். அதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மேற்பார்வையில் தான் மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும். அதிக மாத்திரை மாணவிகளுக்கு எப்படி கிடைத்தன என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.
மதுபோதையில் விபத்து; தினமும் டாஸ்மாக்கை சுத்தம் செய்ய உத்தரவிட்டு நீதிபதி நூதன தண்டனை
முன்னதாக பள்ளி மாணவிகள் அதிக அளவில் சத்து மாத்திரைகளை உட்கொண்டு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்ற தகவல் நீலகிரி, கோவை மாவட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டது. பின்னர் இது காவல் துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் போக்குவரத்து ஆங்காங்கே தடை செய்யப்பட்டு ஆம்புலசுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
விசாரணைக்காக சென்ற தமிழக காவலர்களை ராஜஸ்தான் காவலர்களிடம் சிக்க வைத்த பலே கொள்ளையர்கள்
இதனால் அவசர அவசரமாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.